நினைப்பதெல்லாம்...

நினைப்பதெல்லாம்...
அம்மா! நீயாவது சொல்றதை புரிஞ்சுக்கம்மா,'' என, அம்மா காஞ்சனாவிடம் போனில் கூறினான், பெரிய மகன்.

''அம்மா! நீயாவது சொல்றதை புரிஞ்சுக்கம்மா,'' என, அம்மா காஞ்சனாவிடம் போனில் கூறினான், பெரிய மகன்.

''என்னத்தைடா புரிஞ்சுக்கணும்?'' என்றாள், காஞ்சனா.

''ம்மா! ரெண்டு பேரும் ஒரே இடத்துலே இருக்கிறது கஷ்டம்மா. நீ என்கிட்டே இரு, ஆறு மாசம். அடுத்த ஆறு மாசம், தம்பிகிட்டே போம்மா.''

''என்னடா இப்படி சொல்றே. வயசான காலத்திலே அப்பா எப்படிடா தனியாய் இருப்பார்.''

''க்கூம். நான் தான் சொன்னேனே. லவ்பேர்ட்ஸ் ரெண்டும் ஒண்ணை விட்டு ஒண்ணை பிரியாதுன்னு...'' கணவனின் காதருகில் கிசுகிசுத்தாள், அவன் மனைவி.

'உஷ்...' என்று, வாயின் மேல் விரல் வைத்தவன், மனைவியை விட்டு தள்ளி வந்தான்.

''ம்மா. 'அட்ஜஸ்ட்' பண்ணித்தானேம்மா ஆகணும். விக்கிற விலைவாசியிலே ரெண்டு பேரை சமாளிக்க முடியுமா? யோசிச்சுட்டு போன் பண்ணும்மா. தனியா ரெண்டு பேரும் அங்கேயிருக்க வேண்டாம். அவசரத்துக்கு நாங்களும் வர முடியாத துாரத்துல இருக்கோம். புரிஞ்சுக்கோங்க.''

காஞ்சனாவுக்கு கண்ணைக் கட்டி, காட்டில் விட்டது போலிருந்தது.

ஓய்வு பெற்ற ஆசிரியை, காஞ்சனா. அவள் கணவர் சபேசனும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அரசு கொடுத்த குடியிருப்பிலேயே காலம் தள்ளியாகி விட்டது. இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள், ஜெய்ப்பூரில் கூட்டுக் குடித்தனம்; பெரியவன், ஹைதராபாத்தில், சின்னவன், பூனேயில்.

ஓய்வு பெற்றது முதல் தினமும் ஓடுகிற பிரச்னை இது. இரண்டு பையன்களுமே அழைக்கின்றனர் தான். ஆனால், தலா ஒருவரை மட்டும் தான் வைத்துக் கொள்வராம்.

இப்போது சொன்னது போல, ஆறு மாதம் ஒருமுறை இடம் மாறிக் கொள்ளலாம். இதென்ன அடக்கு முறையாக அல்லவா இருக்கிறது.

''என்னாச்சு? இன்னிக்கும் அதே கதை தானா? இங்கே ஒருத்தர் அங்கே ஒருத்தர்ன்னு,'' என, சிரித்தபடி கேட்டார், சபேசன்.

''ம்! இவங்க என்னங்க, பெத்த தாய் - தகப்பனை சுமையா நெனைக்கிறாங்க. இவங்களை பெத்து, வளர்த்தப்போ நாம அப்படியாங்க நினைச்சோம். அப்படி நினைச்சிருந்தா இப்படி பேசுவாங்களா?'' என்றாள், காஞ்சனா.

''சரி விடு. இப்போதைய பிள்ளைங்க, 'மென்ட்டாலிட்டி'யே இது தான்.''

''ஆனாலும், மனசே ஒப்பலைங்க. இதுகளை எப்படியெல்லாம் வளர்த்தோம். இப்போ என்னடான்னா நமக்கே காசு, பணம்ன்னு கணக்கு பாக்குதுங்க.''

காஞ்சனாவுக்கு ஆறவேயில்லை.

சபேசனுக்கு, 'அல்சர்' உட்பட, எல்லா உடல் பிரச்னையும் உண்டு. யார் வீட்டிலுமே தங்கியதில்லை. தங்கினாலும் கைக்கு கை, காஞ்சனா வேண்டும்.

வெந்நீருக்கு, காபிக்கு எல்லாவற்றுக்குமே அவர் வாயை திறந்து கேட்குமுன்னே, காஞ்சனா செய்திடுவார்.

அதேபோல் தான், சபேசனும். காஞ்சனாவை எங்குமே, யாரிடமும் விட்டுத்தர மாட்டார். 30 ஆண்டு கால தாம்பத்தியம். இருவருமே குடும்பத் தேரின் வடத்தை சமமாகவே பிடித்து இழுத்தனர். தேரும் இப்போது நிலை கொண்டு விட்டது.

பணி ஓய்வு பெற்றதுமே, ஓய்வை ஓரிரு மாதம் அமைதியாக அனுபவித்தனர். நாலு நாள், பெண் வீட்டுக்கும் போய் பார்த்து வந்தாயிற்று.

பிள்ளைகள் வீட்டுக்கும் ஒருமுறை பார்த்து விட்டு வந்து விடலாம் என, எண்ணிய போது தான், தாயை மட்டும் தன்னோடு வந்திருக்கும்படி கேட்டான், பெரியவன்.

காஞ்சனா சிரித்தபடி, 'ஏன்டா அப்பா வேண்டாமா?' என்றாள்.

'வேண்டும் தான்ம்மா? ஆனா, ரெண்டு பேரை வச்சி பார்த்துக்கிற அளவு எனக்கு போதாதும்மா...'

'இல்லைடா! நாங்க ரெண்டு பேருமே ஒரு வாரமோ, 10 நாளோ இருந்துட்டு இங்கியே வந்திடுவோம்...'

'அதைத்தான் வேண்டாம்ன்னு சொல்றேன்மா. எனக்கு ரெண்டுமே பெண்கள். பெரியவ அப்பவோ இப்பவோன்னு இருக்கா. நீ இங்கே வந்திட்டா, ரெண்டு பேருமே வேலைக்கு போறதுக்கு எங்களுக்கு தைரியமாய் இருக்கும்மா...'

அதற்குள், 'கான்ப்ரன்ஸ்' அழைப்பில் வந்தான், சின்னவன்.

'அதேதான்மா, என் பசங்களுக்கும் அப்பா இருந்தாத்தான் வசதி. 'டியூஷன்' மற்றும் கிரிக்கெட் பயிற்சின்னு, அப்பா, அவன்களை அழைச்சிட்டு போக வர உதவியாய் இருக்கும். என்னம்மா சொல்றே?'

இப்படி ஆரம்பித்தது, தினமும் வாடிக்கையாகி, நச்சரிப்பாகி விட்டது.

நிம்மதியாக ஓய்வு காலத்தை கோவில், குளம் செல்லலாம் என, போட்டிருந்த திட்டம் உருத்தெரியாமலேயே போனது. இருவருமே அவரவர் தேவைக்காக, தங்களை பிரிக்க நினைப்பதும், விலைவாசியை காரணம் காட்டுவதும் கடுப்பாக இருந்தது.

யோசித்தாள், காஞ்சனா. எப்படி யோசித்தாலும் ஒரு முடிவுக்கு வர முடியாது தவிப்பு தான் மிஞ்சியது.

''காஞ்சனாம்மா...'' யாரோ அழைத்தனர்.

''ஹேய்... வா, வா, சங்கீதா. ஏன் இங்கியே நின்னுட்ட. உட்காரு காபி குடிக்கிறியா? ஒரு நிமிஷம்.''

''த்சோ வேண்டாம்மா. நான் நாளைக்கு காலையிலேயே ஊருக்கு கிளம்பறேன்மா. அதான் உங்ககிட்டே சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்.''

''என்ன திடீர்ன்னு.''

''எங்க மாமியார் கெணத்தடியிலே விழுந்து, பேச்சு மூச்சில்லாம கிடக்குறாங்களாம். அதான் ஓடுறோம்.''

''அச்சோ! அப்போ யாரு பார்த்துக்கிடறது?''

''அங்கே சொந்தமெல்லாம் நிறைய கெடக்கும்மா. ஆனாலும், பதறுதுல்ல. அதான் போட்டது போட்டபடி கிளம்புறோம். வரட்டுமா?''

''சரி! இரு ஒரு நிமிஷம்,'' என, திரும்பிய காஞ்சனா, குங்குமச் சிமிழை நீட்ட, அதிலிருந்து குங்குமத்தை எடுத்து நெற்றிக்கிட்டு, விடை பெற்றாள், சங்கீதா.

சங்கீதா போன பின்பும் வெகுநேரம் யோசித்ததில், காஞ்சனாவுக்கும் பொறி தட்டியது. இரவு கணவனிடம் தீர்மானமாக கூறி விட்டாள். சபேசனும் சந்தோஷமாய் தலையாட்டினார்.

''என்னம்மா ஒருவாரமா போனே பண்ணலை. தம்பிக்குமே பண்ணலையாம்.''

''கொஞ்சம் வேலைப்பா.''

''சரி! போவட்டும். வீட்டுலே வேண்டாததை எல்லாம் துாக்கிப் போட்டுட்டு காலி பண்ணி வைம்மா. எப்படியும் குவார்ட்டர்சை காலி செய்யணும் தானே. நான் அடுத்த வாரம், அங்கே ஆபிஸ் விஷயமா வரேன். 'ரிட்டர்ன்' தேதி சொல்றேன்.

''அப்பாகிட்டே அதே தேதி, அதே டிரெயின்லே உனக்கு மட்டும் டிக்கெட் போட சொல்லிடு. வேற வேற கோச் இருந்தாலும் பரவாயில்லே. அப்புறமா, டி.டி.ஆரிடம் பேசி மாத்திக்கலாம்,'' என்றான்.

மவுனமாக இருந்தாள், காஞ்சனா.

''அம்மா கேட்குதா, லைன்ல தான் இருக்கியா. கம்முன்னு இருந்தா என்னம்மா அர்த்தம்? சொல்ல மறந்திட்டேனே. தம்பி வீட்டுக்கு அப்பாவை கிளம்ப சொல்லிடு. எந்த டிரெயின்னு விபரம் சொல்லிட்டா, ஸ்டேஷனுக்கு வந்து அவன் கூட்டிட்டு போயிடுவான். ஓ.கே.,வா அம்மா. நான் தேதியை, 'வாட்ஸ்-ஆப்' பண்றேன்.

''அப்பா டிக்கெட், 'புக்' பண்ணதுமே ரெண்டு டிக்கட்டையுமே ரெண்டு பேருக்குமே, 'வாட்ஸ்-ஆப்' பண்ண சொல்லு. சரியா, வைச்சிடட்டுமா,'' என, பதிலைக் கூட எதிர்பாராமல் போனை வைத்துவிட, காஞ்சனாவுக்கு எரிச்சலே வந்தது.

வீட்டுக்கு வந்த அண்ணனையும், தம்பியையும் பூட்டு வரவேற்றது.

''என்னடா? வீடு பூட்டிக் கிடக்கு?'' என்றான், தம்பி.

''தெரியலையே. டிக்கட்டை போட்டு விபரத்தை அனுப்பச் சொன்னேன் தானே. இப்ப வரதுக்கில்லைன்னு சொல்றாங்கடா. அதான் உன்னையும் வரச்சொன்னேன். நேரிலேயே கேட்டுட்டு போலாம்ன்னு,'' என்றான், அண்ணன்.

''ஆமாம்ண்ணா. அப்பா என்னோட வந்தா நல்லது தான். ரெண்டு பசங்களோட அக்கப்போராய் இருக்கு. 'டியூஷன், கோச்சிங்'ன்னு, எங்க ரெண்டு பேராலும் மாறிமாறி போயிட்டு வரமுடியலை. இவளுக்கும், அம்மாக்கும் ஒத்துப் போகாது அப்பான்னா, 'அட்ஜஸ்ட்' ஆகிடுவாரு.''

''ஆமா அதே தான், உங்க அண்ணியும் சொன்னா. பெண் குழந்தைகளுக்கு காவலாகவும், துணையாகவும் இருக்கும்ன்னு.''

''அண்ணா! அப்பாவோட பென்ஷனை ஒரு ஏழெட்டு மாசம் எனக்கு கொடுத்தா நல்லாருக்கும்ணா. கேட்டா தருவாரா? கார் மற்றும் வீட்டுக்கு இ.எம்.ஐ., பசங்க பீசுன்னு கழுத்தை பிடிக்குது.''

''நமக்கு இல்லாம என்னடா? அம்மாகிட்டே நானும் கேட்கத்தான் போறேன். வீடு கட்டுனதுலே கொஞ்சம் கடன். அதான் அம்மாவோட பென்ஷனை வாங்கி, 'அட்ஜஸ்ட்' பண்ணிடலாம்ன்னு.

''அத்தைக்கு மாடிலே, 'ஷெட்' போட்டு, 'டியூஷன் சென்டர்' போல வச்சுக்குடுத்தா அத்தைக்கும் போரடிக்காது, காசுக்கு காசுன்னு, அண்ணி சொல்றா. பென்ஷனை வாங்கிகிட்டாலும் அம்மாவுக்கு கை செலவுக்கு காசு இருக்குமில்லே பார்ப்போம். இந்த அம்மா எங்கே தான் போனாங்க...''

''நாம அடுத்த வாரம் தானே வரோம்ன்னு சொன்னோம். நீ ஏன் உடனே புறப்படுன்னு சொன்னே?''

''காரணமாத்தான்டா. இப்போ, 20 தேதி ஆயிட்டுது. இப்போவே கூட்டிட்டு போயிட்டா, 10 நாள் அப்படி இப்படின்னு போகும். நம்ம கஷ்டத்தையும் சொல்லிப் புரிய வைக்கலாம். முதல் தேதியப்ப பென்ஷனுக்காக நாம, 'அப்ளை' பண்ணிட்டா, அம்மா சாங்ஷன் பண்ணிடுவாங்களே.''

''இருந்தாலும் நீ பயங்கர, 'கிரேட்' அண்ணே! சாணக்கிய புத்தி.''

சிரித்துக் கொண்டான் பெருமையாக, அண்ணன்.

''அம்மாவுக்கு போனை போடுடா. எவ்ளோ நேரம் வாட்ச்மேன் மாதிரி நிக்கிறது.''

''அம்மா...''

''சொல்லுடா, சின்னவனே.''

''எங்கம்மா இருக்கே?''

''வீட்டைப் பூட்டிட்டு எங்க போனீங்க?'' என, 'ஸ்பீக்கரில்' பெரியவன் குரலும் கேட்க, ''நம்ம வீட்டுக்கா வந்திருக்கிறீங்க. அடடா! நாங்க, பாட்டி - தாத்தா வீட்டுக்கு வந்திருக்கோமே...'' என்றாள், காஞ்சனா.

''கிராமத்துக்கா, ஏன்மா?''

''சொல்லிட்டு போலாமில்லே. அனாவசிய அலைச்சல், ச்சே...'' என்றான், பெரியவன்.

''பொறுடா பெரியவனே. நீங்க மட்டுமென்ன சொல்லிட்டா வந்து நிக்கிறீங்க. நீங்க திடீர்ன்னு முடிவு பண்ண மாதிரி தான், நாங்களும் புறப்பட்டோம். நீங்க அடுத்த வாரம் தானே வர்றதா சொன்னீங்க?''

''எங்களுக்கு நேரம் கிடைக்க வேண்டாமா? 'லீவு' கிடைச்சுது வந்திட்டோம்.''

''ரெண்டு பேருக்குமே ஒரே சமயத்துலே, 'லீவு' கிடைச்சு, பெத்தவங்களை பாக்க வந்திட்டீங்களே... பேஷ்! பேஷ்.''

''என்னம்மா கேலி பண்றியா?''

''ச்சேச்சே! நான் ஏன் பண்றேன். அதிசயமா ரெண்டு பேரும் எங்களை பாக்க வந்ததிலே பூரிச்சு நிக்கிறேன்.''

''இப்போ என்ன பண்றது?''

''நீங்க தான் முடிவெடுக்கணும். இங்கே கிளம்பி வாங்க. தாத்தா - பாட்டியை பாத்த மாதிரி இருக்கும். கிராமத்துக்கு வந்து ரொம்பவே காலமாய் இருக்குமே...'' என்றார்.

''அதெல்லாம் கஷ்டம்மா. சரி கிராமத்தில் இருந்தே, ஹைதராபாத் வந்திடுறியா? அப்பாவை பூனேக்கு அனுப்பு. இப்ப நாங்களும் கிளம்புறோம். பிள்ளைங்களை அவளாலே சமாளிக்க முடியாது.''

''பெரியவனே, நாங்க எங்கேயும் வர்றதாயில்லை.''

''ம்மா! என்னம்மா கடைசி நேரத்துலே காலை வாருரே. நீ வந்துதான்மா ஆகணும்.''

''நான் எங்கேடா வரேன்னு சொன்னேன். நீயே முடிவெடுத்துட்டு, அதிலும் தனித்தனியாத்தான் வெச்சுக்குவேன்னு வேற சட்டம் பேசுறீங்க. நீங்க யாருடா எங்களைப் பிரிக்க? பெத்தவங்களைப் பிரிச்சு என்னடா சாதிக்கப் போறீங்க.

''பெத்தவங்களை வச்சு சோறு போடக் கூட முடியாம, விலைவாசி ஏறிப் போச்சுன்னு மூக்காலே அழறே. உன்னோட நான் வந்து, ஏன் இருக்கணும். என் புருஷனை பிரிஞ்சு உனக்கு ஊழியம் செய்யணுமா?

''இதையே, 'நீ ரெண்டு பேரும் வாங்கம்மா. எங்களோடு இருங்க. பெரியவங்க துணையும், வழிகாட்டலும் என் பிள்ளைகளுக்கும் வேண்டும்'ன்னு சொல்லியிருந்தா, எப்பவோ வந்திருப்போம். ஆனா, காசு பணத்தை கணக்கு போட்ட உன்னோட வந்திருக்க வேண்டிய அவசியம் என்னயிருக்கு எங்களுக்கு?''

''என்னம்மா? பேரப்பிள்ளைகளை பாத்துக்க வேண்டியது, உங்க கடமை தானே?''

''ஓ! கடமையைப் பத்தி நீ பேசுறியா? நீ, உன்னைப் பெத்தவங்களுக்கு என்ன கடமையை பண்ணி கிழிச்சுட்டே. ஆமாம், அது என்னங்கடா இந்த, 'ஜெனரேஷன்' மொத்தமுமே இப்படித்தான் இருக்குமா?

''அப்பா - அம்மா மட்டும் அவங்க வயசு காலத்துலேயும், அவங்க சவுகரியத்தை குறைச்சுட்டு கனவுகளை தொடச்சு போட்டுட்டு, உங்களுக்கு பார்த்து பார்த்து செய்யணும். காலம் போன காலத்துலேயும், உங்க பிள்ளைகளோடும் மல்லுக்கு நிக்கணும். இது என்னடா நியாயம்? அப்போ நாங்க எங்க வாழ்க்கையை எப்ப தான் வாழறது?

''இப்போ சொல்றது தான், கேட்டுக்கிடுங்க. நாங்களும், நாங்க பெத்த பிள்ளைகளுக்காகவே ஓடியோடி, எங்க பெரியவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிட்டோம். இப்போ எங்க கடமையை செய்ய, ஒரு சந்தர்ப்பம் கெடச்சிருக்கு.

''ஆமாம்டா, தாத்தாவும் பாட்டியும் அவங்களோட கடைசிப் படியிலே நிக்கிறாங்க. இந்த சமயத்திலாவது மகனாக, உங்கப்பா அவங்க பக்கத்துலே இருந்தா இன்னும் கொஞ்சம் தெம்பா உணர்வாங்களேன்னு, கிராமத்துக்கு வந்திட்டோம்.

''இனிமே இங்கே தான். வேண்டுமானா, 'லீவு'லே குடும்பத்தோட வாங்க, இருந்திட்டுப் போங்க. இதுவும் ஒரு கடமைதான்டா. ஆனா, உங்களுக்கெல்லாம் புரியுமா என்னன்னு தான் தெரியலை. சரி! நான் வைக்கிறேன். பாட்டிக்கு கஞ்சி கொடுக்கணும். வேலை கெடக்கு.''

பெரிய மழையடித்து ஓய்ந்தது போலிருந்தது.

''என்னண்ணா இது? நாம ஒரு ப்ளான் போட்டா. அம்மா இப்படி கவுத்திடுச்சு.''

அண்ணனுமே தலையை தொங்க போட்டு கொண்டான்.