காதல் என்பது வாழ்வின் மிக மெல்லிய ஒரு பரிமாணம்

நான் உறவுகளை சிறுமைப்படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை, ஆனால் அதன் எல்லைகளைப் புரிந்துகொள்வதில் தவறேதுமில்லை. அதற்கு எல்லைகள் உண்டு, ஆனால் அதற்காக, அது அழகானது அல்ல என்பது அர்த்தமில்லை. ஒரு மலர் மிகவும் அழகானது, ஆனால் அதை நான் கசக்கிவிட்டால், இரண்டு நாட்களில் அது உரமாகிவிடும். ஒரு கணத்தில் நான் மலரை அழித்துவிட முடியும், ஆனால் ஒரு மலர் என்றால் என்ன என்பதன் அழகை அது குறைத்துவிடுகிறதா? இல்லை. அதைப்போல், உங்கள் காதல் நுட்பமானது, அதாவது எளிதில் உடையக்கூடியது. அதைப்பற்றிய கற்பனையான விஷயங்களை நம்பாதீர்கள். அதே நேரத்தில், அதனுடன் இணைந்திருக்கும் அழகையும் நான் மறுக்கவில்லை.
ஆனால் வாழ்வின் மிக மெல்லிய ஒரு பரிமாணத்தை, உங்கள் வாழ்வின் அடித்தளமாக்கினால், நீங்கள் எல்லா நேரமும் இயல்பாகவே பதட்டம் மற்றும் வருத்தத்தில் இருக்க நேரிடும். ஏனென்றால் அப்படிப்பட்டதொரு மெல்லிய மலர் மீது நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இது, உங்கள் வீட்டை நீங்கள் பூமியின் மீது கட்டாமல், ஒரு மலர் அழகாக இருக்கும் காரணத்தால் அதன் மீது கட்டிவிட்டு, எப்போதும் பயத்திலேயே வாழ்ந்திருப்பதைப் போன்றது. மாறாக, உங்களது அடித்தளங்களை பூமி மீது கட்டிவிட்டு, பின் மலரைப் பார்த்து, முகர்ந்து, அதை ஸ்பரித்தால் அது அற்புதமாக இருக்கும். ஆனால் ஒரு மலர் மீது உங்கள் வீட்டைக் கட்டினால், நீங்கள் எந்த நேரமும் பயத்தில் இருக்கிறீர்கள். அந்தப் பொருளில்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். காதலை நான் மறுப்பதற்கு முயற்சிக்கவில்லை.
காதல் ஒரு தேவை என்ற நிலையில்
ஒரு நிலையில், நீங்கள் அதைப் பார்த்தால் – முழுமையாக இதனை நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை, ஆனால் பலருக்கும் அது அப்படித்தான் இருக்கிறது – காதல் இல்லாமல் அவர்களால் வாழமுடியாது என்ற அளவுக்கு அது மற்றுமொரு தேவையாகத்தான் இருக்கிறது. உடலுக்கென்று தேவைகள் இருப்பதைப்போல், உணர்ச்சிக்கென்று தேவைகள் உள்ளது. “நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது” என்று நான் கூறும்பொழுது, “ஒரு ஊன்றுகோல் இல்லாமல் என்னால் நடக்கமுடியாது” என்று நான் கூறுவதிலிருந்து எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வைரம் பதிக்கப்பட்ட ஊன்றுகோல் உங்களிடம் இருந்ததென்றால், நீங்கள் மிக எளிதாக அதன் மீது காதல் வயப்படமுடியும். மற்றும் இந்த ஊன்றுகோலை நீங்கள் பத்து வருடங்கள் பயன்படுத்திய பிறகு, “இப்போது நீங்கள் சுதந்திரமாக நடக்கலாம்”, என்று நான் உங்களிடம் கூறினால், “இல்லையில்லை, என் ஊன்றுகோலை எப்படி என்னால் கைவிடமுடியும்”, என்று நீங்கள் கூறுவீர்கள். இதில் வாழ்வின் அறிதல் இல்லை. அதேபோன்று, காதலின் பெயரால், உங்களை நீங்களே முழுக்கமுழுக்க செயலற்றவராகவும், உங்களுக்குள்ளேயே முழுமையில்லாமலும் செய்துகொள்கிறீர்கள்.
இதில் எந்த அழகுமில்லை மற்றும் இதற்கு வேறெந்த பரிமாணமும் இல்லை என்பதுதான் அர்த்தமா? இல்லை, அதற்கென்று மதிப்பீடுகள் உண்டு. ஒருவரின்றி மற்றவர் வாழமுடியாத அளவுக்கு ஒருமித்து வாழ்ந்த பலர் இருந்துள்ளனர். உண்மையிலேயே அந்த மாதிரி இருந்தால், அதாவது இரண்டு உயிர்கள் ஓருயிர் போல் ஆகியிருந்தால், அது அற்புதமானதுதான்.