மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம் மக்கள் சரமாரி கேள்வி; தன்னார்வலர்கள் திணறல்

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம் மக்கள் சரமாரி கேள்வி; தன்னார்வலர்கள் திணறல்
உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை உட்பட, 43 சேவைகளை பெறுவதற்கான,

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை உட்பட, 43 சேவைகளை பெறுவதற்கான, விண்ணப்பப் படிவம் வீடு, வீடாக வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. விண்ணப்பம் கொடுக்க செல்வோர், பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்

தமிழக அரசு, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம், 13 துறைகள் வாயிலாக வழங்கப்படும், 43 சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், செயல்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, ஜாதி சான்றிதழ், வாக்காளர் அட்டை உள்ளிட்ட சேவைகளை, எளிதில் பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது

ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர்ப்புற வார்டுகளில், இரண்டு முறை முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில், 2,000 தன்னார்வலர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், வீடு, வீடாக விண்ணப்பம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் முதற் கட்டமாக, ஆறு வார்டுகளில் விண்ணப்பம் வழங்கும் பணி, நேற்று துவக்கப்பட்டது.

விண்ணப்பம் வழங்கும்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்த தகவல்களை, மக்களுக்கு விளக்கி வருகின்றனர்.

அப்போது பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, தன்னார்வலர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, முகாம் நடக்கும் நாளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி எங்களைத் தேர்வு செய்தால், நாங்கள் இழந்த 23 மாத பணத்தையும் சேர்த்து தருவரா? அப்போது தகுதி இல்லை என்று சொல்லித்தானே, எங்களுக்கெல்லாம் கொடுக்காமல் விட்டீர்கள்.

தேர்தல் நேரம் என்பதால், இப்போது மட்டும் எங்களுக்கு எங்கிருந்து வருகிறது தகுதி? அப்படியென்றால், தகுதி இருந்தும் எங்களை இத்தனை மாதமும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது ஏன் என, சரமாரியாக கேள்வி கேட்கின்றனர்.

இதற்கு பதில் அளிக்க முடியவில்லை. இருந்தாலும், முகாமில் விண்ணப்பித்தால், கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என, சமாதானமாக பேசி, அங்கிருந்து நகர்ந்து விடுகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.