சிந்து நதியே எங்க நாட்டில் தான் உருவாகுது.. தேவை இல்லாமல் உள்ளே வரும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?

டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் பாகிஸ்தானுக்குச் சிந்து நதி நீர் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது சீனாவும் தலையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிந்து நதி குறித்து சீன ஊடகங்கள் கூறும் சில கருத்துகளும் விவாதமாக மாறியுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு பக்கம் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 11 முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்தியா நடவடிக்கை
மற்றொரு பக்கம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. 1960ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் போர்க் காலத்தில் கூட நிறுத்தப்படவில்லை. ஆனால், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடந்ததால் இந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. இந்த ஒப்பந்தம் தான் பாகிஸ்தானுக்குச் சிந்து நதி நீர் கிடைப்பதை உறுதி செய்வதாக இருந்தது
.இது இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சிந்து நதி நீரை இந்தியா தனது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மிகப் பெரிய தண்ணீர் சிக்கல் உருவாகும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில் தான் இந்த விவகாரத்தில் சம்பந்தமே இல்லாமல் சீனா தலையிட்டுள்ளது.
தலையிடும் சீனா
சிந்து நதி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தான் சீனாவிடம் உதவியை நாடியுள்ளது. இதையடுத்தே சீனா இதில் தலையிட்டுள்ளது. முதற்கட்டமாகச் சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து ஒரு பெரிய அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சீனாவின் நடவடிக்கை
சீனாவின் இந்த நடவடிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த மெகா அணையால் இந்தியாவுக்கு வரும் நீர் பாதிக்கப்படாது. ஆனால், ஏற்கனவே பாகிஸ்தான் எல்லையில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க நீண்ட காலமாகவே முயன்று வரும் சூழலில், இந்த விஷயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சீனா பார்க்கிறது. இது பிராந்தியப் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.
குறிப்பாக சிந்து நதி நீர் விவகாரத்தில் சீனா கூறியிருக்கும் கருத்துகள் முக்கியமானது. என்ன தான் சிந்து நதி நீர் ஒப்பத்தில் சீனா என்ற பெயரே குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட இதில் தனக்கும் தொடர்பு இருப்பதாகவே சீனா கருதுகிறது. இந்த விஷயத்தில் இந்தியா ஆக்ரோஷமாகச் செயல்படுவதாகச் சீன ஊடகங்கள் விமர்சித்துள்ளன. மேலும், தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் சீனா எச்சரித்திருந்தது.
தேவையில்லாத கருத்து
எல்லாவற்றையும் விட சிந்து நதி நீரே சீனாவின் மேற்கு திபெத் பகுதியில் தான் உற்பத்தி ஆவதாகச் சீனா சுட்டிக்காட்டியுள்ளது. இதுவே ஒரு ஒருவிதமான மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை பார்த்துப் பார்த்தே ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. ஆனால், இப்போது சீனாவும் உள்ளே வந்துள்ளது இந்தியாவுக்கு அழுத்தத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.