மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 4-முறை நிரம்பியது.

காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க தடை விதித்து பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சேலம்:

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 4-முறை நிரம்பியது. இதையடுத்து அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் கடந்த 27-ந் தேதி மாலை அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அது நேற்று முன்தினம் மாலை முதல் 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க தடை விதித்து பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கடந்த 27-ந் தேதி முதல் இன்று காலை 9 மணி வரை 1 லட்சம் கனஅடியை தாண்டி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் காலை 9 மணி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. பின்னர் மதியம் 1 மணியளவில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. ஆனாலும் தண்ணீர் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி சீறிப்பாய்ந்து செல்கிறது..