பசிபிக், ஆண்டிஸ், அமேசானை இணைத்த 3500 ஆண்டு பழமையான நகரம் எப்படி உள்ளது

வடக்கு பெருவில் இருக்கும் பரான்கா பிராந்தியத்தில் ஒரு பழமையான நகரத்தை கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
பெனிகோ என்று அழைக்கப்படும் இந்த 3,500 ஆண்டு பழமையான நகரம், ஆரம்பகாலகட்ட பசிபிக் கடற்கரை சமூகங்களை, ஆண்டிஸ் மலைகள் மற்றும் அமேசான் படுகையில் இருந்த சமூகங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய வணிக மையமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
லிமாவிற்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அண்மைய கிழக்கு உலகு மற்றும் ஆசியாவில் முதல் நாகரிகங்கள் உருவான 1800 கிபி மற்றும் 1500 கிமு-க்கு இடைபட்ட அதே காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப் பழமையான நாகரிகமான கரால் நாகரிகத்திற்கு என்னவானது என்பதை இந்த கண்டுபிடிப்பு வெளிச்சம்போட்டு காட்டுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஆய்வாளர்கள் வெளியிட்ட டிரோன் காட்சிகளில் மலையில் பக்கவாட்டில் அமைந்துள்ள நகரின் நடுவில் வட்டவடிவில் ஒரு கட்டமைப்பும் அதனை சுற்றி கல் மற்றும் மண் கட்டடங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன.
அந்த இடத்தில் எட்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வு, சடங்குகளுக்கான கோயில்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உள்பட 18 கட்டமைப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில் உள்ள கட்டடங்களில், ஆராய்ச்சியாளர்கள் சடங்கு பொருட்கள், மனித மற்றும் விலங்கு உருவங்களின் களிமண் சிற்பங்கள், மற்றும் மணிகள், கடல் ஓடுகளால் ஆன நெக்லஸ்களை கண்டறிந்தனர்.
ஒரு நாற்கர மண்டபத்தின் சுவர்களில் "புதுதுஸ்" (கடல் சங்குகளால் ஆன காற்று இசைக் கருவிகள்) வடிவமைப்புகளுடன் கூடிய ஒரு கட்டமைப்பு அங்கிருக்கும் கட்டடங்களில், தனித்து தெரிகிறது.
இது, இந்த கட்டடத்தை நிர்வாக மற்றும் கருத்தியல் செயல்பாடுகளுக்கான முக்கியமான இடமாக அடையாளப்படுத்தலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.