பூமியின் சுழற்சி வேகம் குறையும் போக்கு மாறி, கடந்த 20 ஆண்டுகளில் வேகமெடுத்து

2025 ஜூலை 9-ஆம் தேதி, பூமி வழக்கத்தைவிட 1.38 மில்லி விநாடிகள் வேகமாக சுழன்றது. இதனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடித்தது. இது வரலாற்றில் பதிவான மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
பன்னாட்டு பூமி சுழற்சி & குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் மேலும் அடுத்தடுத்து குறுகிய நாட்களை எதிர்பார்க்கிறார்கள். ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025- ஆகிய நாட்களில் ஒரு நாளின் நீளம் முறையே 1.388 மில்லி விநாடிகள் மற்றும் 1.4545 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும். இது கண் சிமிட்டும் நேரத்தைவிட (சுமார் 100 மில்லி விநாடிகள்) கணிசமாகக் குறைவு.
ஒரு நாள்' என்றால் என்ன
நாம் பொதுவாக ஒரு நாளை 24 மணி நேரம் - அதாவது பூமி தன்னைத்தானே சுழல எடுக்கும் காலம் எனக் கருதுகிறோம். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல. வெகு தொலைவில் உள்ள விண்மீனின் கிரகம் ஒன்று 360 டிகிரி சுழன்ற பின்னர் அதே வான் நிலைக்கு திரும்ப சுமார் 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகள் ஆகும். இந்த கால அளவு 'நட்சத்திர நாள்' (Sidereal Day) என அழைக்கப்படுகிறது, இது நமது வழக்கமான 24 மணி நேரம் கொண்ட நாளை விட 4 நிமிடங்கள் குறைவாக உள்ளது.
சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு (ஒரு மதியம் முதல் அடுத்த மதியம் வரை) நாம் நாளின் நீளத்தை அளந்தால், இந்த 'சூரிய நாள்' (Solar Day) வருடம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும்.
பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால், சூரியனுக்கு அருகில் இருக்கும் ஜனவரி மாதத்தில் வேகமாகவும், சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும் ஜூலை மாதத்தில் மெதுவாகவும் நகர்கிறது. மேலும் பூமியின் சாய்ந்த அச்சும் சூரிய நாளின் நீளத்தை பாதிக்கிறது.
இதன் விளைவாக, உண்மையான சூரிய நாள் டிசம்பர் இறுதியில் 24 மணி 30 வினாடிகள் வரை நீளமாகவும், செப்டம்பர் நடுப்பகுதியில் 23 மணி 59 நிமிடங்கள் 38 வினாடிகள் எனக் குறுகியும் இருக்கும்.
நடைமுறை நேரக் கணக்கீட்டிற்காக, இந்த எல்லா மாறுபாடுகளின் சராசரியான 'சராசரி சூரிய நாளை' (Mean Solar Day) பயன்படுத்துகிறோம். இதுவே 24 மணி நேரம் (அல்லது 86,400 வினாடிகள்) என நாம் வரையறை செய்கிறோம். இதுவே நமது நாள்தோறும் பயன்படுத்தும் நேர அமைப்பின் அடிப்படையாகும். இதன் தொடர்ச்சியாகக் கடிகாரம் சரியாக 86,400 வினாடிகளைக் கடக்கும்போது ஒரு நாள் முடிந்துவிட்டது எனக் கருதுகிறோம்.
இதன் பொருள், 9 ஜூலை 2025 அன்று உண்மையான நாளின் நீளம் 23 மணி 59 நிமிடங்கள் 59.9985793 வினாடிகள் அல்லது 86,399.9986154 வினாடிகள் மட்டுமே இருந்தது; கடிகார நாளின் நீளமான 86,400 வினாடிகள் (24 மணி நேரம்) அல்ல.
அன்றாட பேச்சுவார்த்தைகளில் "நாளின் நீட்சி" என்று குறிப்பிடும் போது, சூரியன் உதயமாகி அஸ்தமிக்கும் பகல் நேரம் அல்லது நமது கடிகாரங்களில் காணப்படும் 24 மணி நேரம் என புரிந்துக்கொள்கிறோம்.
ஆனால் பூமியின் சுழற்சியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இது நமது கிரகம் வழக்கத்தைவிட வேகமாக அல்லது மெதுவாக சுழல்வதை அளவிடும் ஒரு அலகு வரையறையாகும்.
பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) வெரி லாங் பேஸ்லைன் இன்டர்ஃபெரோமெட்ரி (VLBI) ரேடியோ தொலைநோக்கிகளை பயன்படுத்தி தொலைதூர ரேடியோ மூலங்களான குவாசர்களைக் கண்காணிக்கிறது.
இந்த ரேடியோ மூலங்கள் வானத்தில் அதே துல்லியமான நிலைக்குத் திரும்புவதற்கான நேரத்தை அவர்கள் மிகத் துல்லியமாக அளக்கின்றனர். இதிலிருந்து பூமியின் மெய்யான சுழற்சி வேகம் கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடு யுனிவர்சல் டைம் (UT1) எனப்படும்.
விஞ்ஞானிகள் இந்த உண்மையான அளவீட்டை (UT1) நாம் நேரக் கணக்கீட்டில் பயன்படுத்தும் கடிகார நாளின் நீட்சியான 86,400 வினாடி நீண்ட சராசரி நாளுடன் ஒப்பிடுகின்றனர். இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, மில்லி வினாடிகளில் அளவிடப்படும் போது, அதைத்தான் விஞ்ஞானிகள் "நாளின் நீட்சி" (LOD) என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடுகின்றனர்.
நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது; ஒரு நாளின் நீட்சி கூடுகிறது என்பது பொருள். அதே போல எதிர்மறை மதிப்பு காணப்படும்போது, அது வேகமாக சுழல்கிறது, நாளின் நீட்சி குறைந்து விட்டது என்று பொருள்.
காலத்தைக் கணிக்கும் புதைபடிவங்கள்
இன்றைய வானியலாளர்கள் பூமியின் சுழற்சி மாறுபாடுகளைக் கண்டறிய தொலைதூர குவாசர்களைப் பயன்படுத்தினால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுழற்சியைப் கண்டுபிடிக்க புதைபடிவ மரங்களையும் பவளப்பாறைகளையும் தொல்லுயிரி வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர்.
மரங்களின் அடிமரத்தில் ஆண்டுதோறும் வளரும் வருடாந்திர வளையம் போலவே, ருகோஸ் (rugose) மற்றும் ஸ்க்ளராக்டினியன் (scleractinian) போன்ற பவளங்கள் தங்கள் கால்சியம் கார்பனேட் கூடுகளில் தினசரி மற்றும் வருடாந்திர வளையங்களை உருவாக்குகின்றன. இவற்றில் தினசரி வளையங்கள் இரவு-பகல் சூரிய ஒளிச் சுழற்சியின் மாறுபாடுகளால் உருவாகின்றன.
அதேநேரம், தடித்த வருடாந்திர வளையங்கள் பருவமாற்றங்களைக் காட்டுகின்றன. இந்தத் தினசரி வளையங்களை எண் தொகை செய்து ஆராய்ச்சியாளர்கள் பூமி ஒரு வருடத்தில் எத்தனை சுழற்சிகளை முடித்தது என்பதைக் கணக்கிடுகின்றனர்.
உதாரணமாக, மத்திய டெவோனியன் காலத்திய (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளப் புதைபடிவங்கள் வருடத்திற்கு 400 தினசரி வளையங்களைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அக்காலத்தில் பூமி வருடத்திற்கு 400 முறை சுழன்றுள்ளது.
இதைவிட இளைய கார்பனிஃபெரஸ் காலத்திய (சுமார் 330 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளங்களில் வருடத்திற்கு 390 வளையங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அதாவது அன்று ஒரு வருடம் என்பது 390 நாட்கள். இது காலப்போக்கில் பூமியின் சுழற்சி வேகம் மெதுவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பூமி சுமார் 365.25 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது.
பூமியின் மாறும் சுழற்சியை வெளிப்படுத்தும் புராதன பதிவுகள்
வரலாற்றாசிரியர்களும் இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் இணைந்துள்ளனர். கிமு 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த சூரிய, சந்திர கிரகணங்களின் வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்து அந்த கால பூமியின் சுழல் வேகத்தை கணக்கிட முனைந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது. நவீன கணினி மாதிரிகள் மூலம், ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகணத்தின் சரியான பாதையை மீண்டும் உருவாக்க முடிந்தது. எந்த வேகத்தில் பூமி சுழன்றால் பதிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி பாபிலோனிலிருந்து கிரகணம் புலப்பட்டிருக்கும் என கணினி மாதிரி கொண்டு ஆய்வு செய்தனர்.
இதன் வழியே அன்று பூமி தன்னைத்தானே சுழல எடுத்துக் கொண்ட நேரத்தை கணக்கிட முடிந்துள்ளது. இதுபோன்ற வரலாற்று ஆய்வுகளிலிருந்து இந்த வரலாற்றுக் காலப்பகுதியில் நாளின் நீட்சி (LOD) ஒரு நூற்றாண்டுக்கு சுமார் 1.74 முதல் 1.8 மில்லி வினாடிகள் வரை அதிகமாக இருந்துள்ளது என்பதாகும். அதாவது பூமி சுழலும் வேகம் குறைந்துள்ளது; நாளின் நீட்சி அதிகரித்துள்ளது.
பூமியின் சுழற்சி மர்மம்
பல மில்லியன் ஆண்டுகளாக, பூமியின் சுழற்சி படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருந்தது, இதன் விளைவாக நமது நாட்கள் நீளமாயின. ஆனால் சமீபத்தில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்து வருகிறது. 2020 முதல், பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் நமது கிரகம் வேகமெடுத்து சுழல்வதை கவனித்துள்ளனர்.
உண்மையில், 1960களில் அணு கடிகாரங்கள் நேரத்தை அளவிடத் தொடங்கியதிலிருந்து, 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் மிகக் குறுகிய 28 நாட்களைப் பதிவு செய்துள்ளது.
இந்த எதிர்பாராத வேகமயக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 27 முறைகளில் செய்ததுபோல் லீப் செகண்ட் சேர்ப்பதற்குப் பதிலாக, முதல் முறையாக ஒரு வினாடியை கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஆனால், பூமி ஏன் திடீரென வேகப்படுகிறது? விஞ்ஞானிகள் நமது கிரகத்தின் உருகிய இரும்பு-நிக்கல் கோர் (மையம்) பகுதியில் நிறை மறுபகிர்வு ஏற்பட்டு, சுழற்சியைப் பாதிக்கிறது எனச் சந்தேகிக்கின்றனர். எனினும், நமது உலகம் ஏன் வேகமாகச் சுழல்கிறது என்பதை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.
கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி ஏன் வேகமெடுத்து சுழல்கிறது என்பது இன்னமும் மர்மம் தான்.