தாலிபன் அரசை அங்கீகரித்த ரஷ்யா - இந்தியாவின் ராஜதந்திர உத்தி மாறுமா?

ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசை அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது ரஷ்யா
தாலிபன் காபூலைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பிறகான நான்கு வருடங்களில் இது அவர்களது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் நகர்வு, இதுவரை தாலிபன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புவதாக ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தெரிவித்தார்.
ரஷ்யாவின் முடிவை துணிச்சலான முடிவு என அவர் விவரித்தார்.
இந்த முடிவால், "எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் கட்டமைப்பு" ஆகியவற்றில் ஆதாயம் இருப்பதாக கருதுவதாகவும். பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
"இதைப் போன்ற நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் மக்களை மட்டுமல்லாது, மொத்த உலகின் பாதுகாப்பை அபாயத்திற்கு உள்ளாக்குகிறது," என ஆப்கானிஸ்தான் முன்னாள் எம்.பி. ஃபௌசியா கூஃபி தெரிவித்தார்.
அதே நேரம், 'இது சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அரசை அங்கீகரிக்கிறது. இந்த ஆட்சி பெண்களுக்கு எதிரானது மட்டுமல்லாது தொடர்ந்து பொது உரிமைகளை நீக்கிவருகிறது,' என ஆப்கான் வுமென் பொலிடிக்கல் பார்டிசிபேசன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
பெண்கள் உரிமைகளை மதிப்பதாக தாலிபன் அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த உரிமைகள் ஆப்கான் பண்பாடு மற்றும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றிய அவர்களது சொந்த விளக்கத்தை பொறுத்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்கள் பெரும்பாலான பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை.
கூடுதலாக பெண்கள் தனியாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் உள்ளன; அவர்கள் ஒரு ஆண் உறவினர் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
இப்போதுவரை சர்வதேச அரங்கில் தாலிபன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சர்வதேச அளவில் உருவாகியிருக்கும் ஒத்த கருத்தில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு பிரிவை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
தாலிபனுக்கு முறைப்படியான அங்கீகாரம் அளிக்காமல், குறுகிய அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் ஒருவருக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இதுவரை இருந்தது. ஆனால் நேரடி அங்கீகாரம் அளித்ததன் மூலம் ரஷ்யா இந்த சிந்தனைக்கு சவால் விடுத்துள்ளது.
வாஷிங்டனை சேர்ந்த சிந்தனைக்குழுவான வில்சன் மையத்தைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர் மைக்கேல் கூகல்மேன், "ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா இருக்கிறது. சீனா அடுத்ததாக இருக்கலாம். இப்போது வரை நாடுகள் தங்களது சொந்த நலனுக்காக தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் ஒரு அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சர்வதேச ஒருமித்த கருத்தாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கருத்து தற்போது உடைந்து வருவதாக தெரிகிறது." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. "ஆப்கானிஸ்தான் எங்களது அண்டை நாடு மற்றும் பாரம்பரிய நட்பு நாடு. ஆப்கானிஸ்தான் சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதை சீனா எப்போதும் நம்பி வந்திருக்கிறது," என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.