டிசிஎஸ் –ஐ தொடர்ந்து மற்றொரு ஐடி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..

டிசிஎஸ் –ஐ தொடர்ந்து மற்றொரு ஐடி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..
அமெரிக்க பொருளாதார மந்த நிலை, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள், சர்வதேச அளவில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிப்பு

புனே: அமெரிக்க பொருளாதார மந்த நிலை, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள், சர்வதேச அளவில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிப்பு என பல்வேறு காரணிகளும் ஐடி துறையை மந்த நிலையிலேயே வைத்திருக்கின்றன. இந்த சூழலில் தான் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் திடீரென தங்கள் ஊழியர்களில் 12000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்தியாவில் ஐடி சேவையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய நிறுவனமே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருப்பதால் மற்ற ஐடி நிறுவனங்களும் இதையே பின் தொடரும் என ஐடி துறையினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த சூழலில் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை ஒரு காலாண்டுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது..

புனே தலைமையிடமாக கொண்டு செயல்பட கூடிய ஐடி சேவை நிறுவனம் தான் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை ஒரு காலாண்டுக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்திருக்கிறது, இது மட்டும் இன்றி தங்கள் நிறுவனத்தில் ஃபிரஷர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறது. பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் 2026 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

நிறுவனத்தின் வருமானம் 389.7 மில்லியன் டாலராக இருக்கிறது இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 3.9 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இந்த நிறுவனம் பிரதானமாக வங்கி , நிதி சேவை மற்றும் காப்பீட்டு துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஐடி சேவைகளை வழங்குவதே வருமானம் உயர்ந்திருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அதே வேளையில் இந்த நிறுவனத்தின் சுகாதார மற்றும் லைஃப் சயின்ஸ் பிரிவில் வருமானம் என்பது 1.9% குறைந்துள்ளது. இந்த துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருப்பவை இந்த நிறுவனங்கள் அமெரிக்க பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடிக்காக செய்யக்கூடிய செலவுகளை குறைத்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையே உலக பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதாக பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தீப் கல்ரா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் மேக்ரோ பொருளாதார சூழல்களை தங்கள் நிறுவனம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அதற்கேற்றபடி முன்னெச்சரிக்கையுடன் சில நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கை காரணமாக தங்களுடைய கிளைண்டுகள் புதிய ப்ராஜெக்ட் கையில் எடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர், இதனால் தங்களுக்கு புது ப்ராஜெக்டுகள் கிடைப்பது தாமதமாவதாக தெரிவித்துள்ள அவர் இந்த சூழலில் அடுத்து இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளில் சரியாகி விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்...