ஆரணியில் கிலோ கணக்கில் மின்னிய வெள்ளி.. 25 kg தங்கம் ஜஸ்ட் மிஸ்.. 300 கேமராவால் திகைத்த திருவண்ணாமலை

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்திலும், கொள்ளை சம்பவங்கள் பெருகியவாறே உள்ளன.. அதிலும் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்களும், கொள்ளை நிகழ்வுகளும் நடந்துவருவது, அம்மக்களை கலங்கடித்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளை சம்பவமானது, காவல்துறைக்கே சவாலாக இருந்து வருகிறது. இதுசம்பந்தமான தீவிரமான விசாரணையை போலீசார் நடத்தி வந்தபோதிலும், இன்னும் கொள்ளையர்கள் சிக்காதது, மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிது..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள இளங்குன்னி கிராமத்தில், கடந்தவாரம்கூட ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது..
புஷ்பா என்ற 63 வயது பெண், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்... சம்பவத்தன்று, தான் வளர்த்து வரும் பசுமாட்டை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றிருக்கிறார் புஷ்பா.. அன்றைய தினம் மாலை மாடு மட்டும் வீடு திரும்பியது..
ஆரணி புஷ்பாவின் 5 பவுன் நகை
நீண்ட நேரமாகியும் புஷ்பா வீடு திரும்பவில்லை. இறுதியில், புஷ்பா அவரது நிலத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 4.5 சவரன் நகைகள் காணாமல் போயிருந்தன.. மர்ம ஆசாமிகள் நகைக்காக புஷ்பாவை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் இது தொடர்பான விசாரணையையும் கையில் எடுத்தனர்.
அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டதுடன், 2 ஓட்டல்களிலிருந்தும். ரூ.6,200 திருடு போயிருந்தது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது..
இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு, மீண்டும் ஆரணியில் கொள்ளை நடந்துள்ளது.. ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் இ.பி.நகரை சேர்ந்த பெருமாள் (37), என்பவர், ஆரணி-வேலூர் சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 27ம் தேதி கடைக்கு வந்தபோது, சுமார் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
25 கிலோ தங்க நகைகள்
இந்த கொள்ளை சம்பவம் குறித்த தகவலறிந்ததுமே, டிஎஸ்பி தலைமையிலான ஆரணி தாலுகா போலீசார் நேரடியாகவே வந்து நகைக்கடையை பார்வையிட்டனர்... எனவே, கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.
மொட்டைமாடியிலுள்ள ஷட்டரை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து, கடையின் சுவரை துளையிட்டு, இந்த கொள்ளையை நடத்தியிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது..
ஆனால், கேஸ் கட்டர் மூலம் லாக்கரையும் உடைக்க முயன்றுள்ளனர்.. ஆனால், அது முடியாததால் 25 கிலோ தங்க நகைகள் தப்பியிருக்கிறது..
வீடியோ ரெக்கார்டர்கள்
அதேபோல, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டு, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை கொள்ளையர்கள் எடுத்து சென்றுவிட்டார்களாம். எனவே, கொள்ளையர்களை பிடிப்பதில், ஆரணி தாலுகா போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கிறது..
குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அகிலன், சுந்தரேசன், விநாயகமூர்த்தி, மகாலட்சுமி தலைமையிலான போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார்.. இந்த தனிப்படை போலீசார் ஆரணி டவுன், சேவூர் பைபாஸ் சாலை, வேலூர், விழுப்புரம், வந்தசாவி, செய்யாறு, திருவண்ணாமலை செல்லும் சாலைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்..
முக்கிய தடயம் சிக்கியது
அப்போதுதான்., கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மொத்தம் 3 பேர் என்பதும், இவர்கள்தான் நகைக்கடையில் 15 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து, கையில் கொண்டுவந்திருந்த பையில் எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது..
3 பேருமே ஹெல்மெட் அணிந்தபடி வந்துள்ளனர்.. ஆரணி டவுன் பகுதியில் முக்கிய வீதிகளில் சுற்றிவிட்டு, அதற்கு பிறகு தப்பி சென்றிருக்கிறார்கள்.. அநேகமாக இவர்கள் ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்கிறார்கள்.. கொள்ளை சம்பவம் நடந்து, 4 நாள் கழித்து, குற்றவாளிகள் குறித்து முக்கிய தடயம் சிக்கியிருப்பதால் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தனிப்படை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...