வங்கியில் வாங்கும் கடன் தொகையை யு.பி.ஐ., வாயிலாக செலவழிக்கலாம்; விரைவில் வருகிறது புதிய வசதி..

தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் என்.பி.சி.ஐ., நிறுவனம் யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகளை செயல்படுத்தி வருகிறது.
அவரவர் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை, 'கூகுள் பே, பேடிஎம், போன் பே' உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகள் வாயிலாக பரிவர்த்தனை செய்யும் வசதி இப்போது நடை முறையில் உள்ளது.
இனி, வீடு, தனிநபர், நகைக் கடனை பெற விண்ணப்பிக்கும்போது, கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையை யு.பி.ஐ., வாயிலாக பரிவர்த்தனை செய்ய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
என்ன நன்மை?
வங்கி, நிதி நிறுவனங்கள் ஒப்புதல் அளித்த கடன் தொகையில் மொத்தமும் ஒரே நேரத்தில் தேவைப்படாமல் போகலாம். ஆனால், மொத்த தொகைக்கும் வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. யு.பி.ஐ., வசதியில், தேவையான தொகையை மட்டுமே பயன்படுத்தினால், அந்த தொகைக்கு மட்டுமே வட்டி பொருந்தும்..
கடன் தொகையை யு.பி.ஐ.,யுடன் லிங்க் செய்து விட்டால், வழக்கமான சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் செலவிடுவது போலாகி விடும். எனினும், எந்த நோக்கத்துக்கு கடன் பெறப்படுகிறதோ அதற்கு மட்டுமே செலவிடுவது கட்டாயம் என, என்.பி.சி.ஐ., தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கு உத்தரவு
இதுதொடர்பாக, என்.பி.சி.ஐ., வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'ஆக., 31ம் தேதிக்குள் இதற்காக யு.பி.ஐ., நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்துள்ளது.
இதற்காக வங்கிகள், பேமென்ட் சேவை நிறுவனங்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு செயலி சேவை அளிப்பவர்களுக்கு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.
* மொத்த கடன் தொகைக்கும் வட்டி கட்டாமல், செலவழித்த தொகைக்கு மட்டும் செலுத்தினால் போதும்
* நகை, சொத்து, தனிநபர், மியூச்சுவல் பண்டு, பங்குகள், பத்திரங்கள், பிக்சட் டிபாசிட் மீது பெறும் கடனுக்கு யு.பி.ஐ., பொருந்தும்
* ஆக., 31க்குள் வழிமுறைகள் வகுக்கப்பட்டதும், விரைவில் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரும்..