தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் இன்று ஆய்வு

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனருக்கு தெரியாமல், ஒட்டு கேட்கும் கருவியை யார் பொருத்தி உள்ளனர் என்பது குறித்து, தனியார் துப்புறியும் நிறுவனத்தினர் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர்
விருத்தாசலத்தில் நேற்று நடந்த வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,'என் வீட்டில் நான் உட்காரும் இடத்தில், என்னுடைய நாற்காலிக்கு பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி லண்டனிலிருந்து வந்துள்ளது. விலை அதிகமானது. இந்த கருவியை யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து வருகிறாம்' என, கூறியிருந்தார்.
இந்த ஒட்டு கேட்கும் கருவி தைலாபுரம் தோட்டத்திலுள்ள ராமதாஸ் இல்லத்தில் இரு தினங்களுக்கு முன், பொருத்தியிருந்தது, சென்னையிலுள்ள தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, ராமதாசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கட்சி தொடர்பான அவசர முடிவுகள் எடுக்கும் போது, உடனுக்குடன், கட்சிக்கு எதிராக உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபரம் தெரிந்த பின்னர்தான், தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுகேட்கும் கருவி ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் ஆய்வு நடத்திய பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில் இரு நாட்கள் கட்சி தொடர்பான கூட்டங்களை முடித்துக்கொண்டு, ராமதாஸ் நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார்.
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை, தனியார் துப்பறியும் ஏஜென்சி மீண்டும் தைலாபுரம் தோட்டத்தில், ஒட்டுகேட்கும் கருவி குறித்து, நேரடியாக வந்து ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒட்டு கேட்கும் கருவி எங்கிருந்து வாங்கப்பட்டது, யார் மூலம் வாங்கி தைலாபுரம் தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து, தனியார் துப்பறியும் ஏஜென்சி, கட்சி நிறுவனர் ராமதாசிடம் முறைப்படி, விவரமாக தகவல் அளிக்க உள்ளது.
இதன் அடிப்படையில் சென்னையிலுள்ள சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில், முறையாக தைலாபுரம் தோட்டம் சார்பில் புகார் கொடுக்கப்படும் என்று பா.ம.க.,வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர்.