தமிழகத்தில் டன் கணக்கில் மாம்பழ கூழ் தேக்கம்; விற்பனைக்கு மத்திய அரசின்

தமிழகத்தில் டன் கணக்கில் மாம்பழ கூழ் தேக்கம்; விற்பனைக்கு மத்திய அரசின்
தமிழகத்தில் தேக்கம் அடைந்துள்ள மாம்பழ கூழை, வெளிநாடுகளில் விற்க, 'அபிடா' எனப்படும்,

சென்னை: தமிழகத்தில் தேக்கம் அடைந்துள்ள மாம்பழ கூழை, வெளிநாடுகளில் விற்க, 'அபிடா' எனப்படும், மத்திய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், உதவி செய்ய முன்வந்துள்ளது.

தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, திருப்பத்துார், சேலம், வேலுார், மதுரை உட்பட, பல்வேறு மாவட்டங்களில், 3.60 லட்சம் ஏக்கரில், மாமரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஆண்டுதோறும், 10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு காலநிலை சாதகமாக இருந்ததால், மாம்பழ உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்தது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும், மாம்பழ உற்பத்தி கணிசமாக அதிகரித்தது. இதனால், உற்பத்தியான மாம்பழங்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள, மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளில், மாம்பழம் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இது குறித்து, மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலை நிர்வாகத்தினருடன், தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, 'மூன்று ஆண்டுகளாக, மாம்பழ கூழ் தேக்கம் அடைந்துள்ளதால், அவற்றை கொள்முதல் செய்ய முடியாது' என, ஆலை நிர்வாகங்கள் தெரிவித்தன..

மாம்பழ கூழ் விற்பனைக்கு உதவுவதாக, வேளாண் துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்று, மாம்பழ கூழ் தயாரிப்பை, ஆலைகள் நிர்வாகிகள் மீண்டும் துவக்கினர். அதைத் தொடர்ந்து, ஆலைகளில் தேக்கம் அடைந்துள்ள மாம்பழ கூழை, வெளிநாடுகளில் விற்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது...

இது குறித்து, வேளாண்துறை செயலர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:

ஆலைகளில் தேங்கியுள்ள மாம்பழ கூழை விற்க, மத்திய அரசின் உதவியை நாடினோம். இது தொடர்பாக, மத்திய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவருடன், இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினோம்.அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேங்கியுள்ள மாம்பழ கூழை, வெளிநாடுகளில் விற்க உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

இதற்காக, ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகளில் நடக்க உள்ள சர்வதேச கண்காட்சியில், இந்திய அரங்கில், மாம்பழ கூழை சந்தைபடுத்த, ஆலோசனை வழங்கி உள்ளனர். மேலும், அங்குள்ள நிறுவனங்களுடன் பேச்சு நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். குளிர்பான நிறுவனங்கள் மற்றும் மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலை நிர்வாகிகள் இடையே, பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, வரும் ஆண்டுகளில், மாம்பழ கூழ் தேக்கம் அடையாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்..