ஓய்வுக்கு முதல் நாள் கிடைக்கும் பதவி உயர்வால் விரக்தி!

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''நீச்சல் குளத்தை இடம் மாத்திட்டாங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்
எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்துல, சில வருஷங்களுக்கு முன்னாடி, தி.மு.க.,வினர் ஏற்பாட்டில், கிரிக்கெட் வலை பயிற்சி மையத்தை அமைச்சாங்க...
''இதன் அருகே இருக்கிற, 25 மீட்டர் நீச்சல் குளத்தில் தேசிய போட்டிகள் நடத்த முடியாததால, 50 மீட்டர் நீளத்தில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கணும்னு, விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை வச்சுட்டே இருந்தாங்க பா...
''இதனால, கிரிக்கெட் பயிற்சி மையத்தை அகற்றிட்டு, 50 மீட்டர்ல நீச்சல் குளம் அமைக்கலாம்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அதிகாரிகள் திட்ட மதிப்பீடும் தயார் செஞ்சாங்க...
''இந்த சூழல்ல, 'ஒலிம்பிக் அகாடமி' பெயரில் மதுரையில் நீச்சல் குளம் அமைக்க, சமீபத்துல, 12 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியிருக்கு... ஆனா, கிரிக்கெட் பயிற்சி மையத்தை அகற்றாம, விளையாட்டு விடுதி பக்கத்துல புதுசா நீச்சல் குளம் கட்ட முடிவு பண்ணியிருக்காங்க...
''கிரிக்கெட் பயிற்சி மையம் மீது கை வச்சா, உள்ளூர் தி.மு.க., பிரமுகர்களால பிரச்னை வரும்னு பயந்து, அதிகாரிகள் புது நீச்சல் குளத்தை கட்டுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அமைச்சரை கூப்பிட்டு கண்டிச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகள் இருக்கு... தி.மு.க.,வுல இதை, ஈரோடு தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டம்னு மூணா பிரிச்சிருக்காங்க... தெற்குல அமைச்சர் முத்துசாமி தான் மாவட்டச் செயலரா இருக்காருங்க...
''ஓரணியில் தமிழகம் என்ற தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை திட்டத்துல, மத்திய மாவட்டம், முதலிடம், வடக்கு மாவட்டம், இரண்டாமிடம், தெற்கு மாவட்டம் , மூன்றாம் இடத்துல இருக்கு... தெற்கு மாவட்டத்துல வர்ற ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிகள்ல கம்மியான உறுப்பினர்கள் தான் சேர்ந்திருக்காங்க...
''இது சம்பந்தமா, அமைச்சர் முத்துசாமியை முதல்வர் ஸ்டாலின் கூப்பிட்டு கண்டிச்சிருக்காரு... முத்துசாமியும் உடனே ஊர் திரும்பி, தொகுதி வாரியா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, உறுப்பினர் சேர்க்கையில கவனம் செலுத்திட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வீட்டுக்கு போற நேரத்துல, 'புரமோஷன்' போடறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழகத்தில் வேளாண், தோட்டக்கலை துறையில், 'ரிட்டயர்' ஆக சில நாட்கள் இருக்கறப்ப தான், இணை இயக்குநர்களுக்கு கூடுதல் இயக்குநர்களா பதவி உயர்வு தரா... இவாளுக்கு சீனியாரிட்டி இருந்தாலும், அதை உடனடியா தராம, ஓய்வுக்கு முன்னாடி தான் தரா ஓய்...
''அதுலயும் சிலருக்கு, ஓய்வுக்கு முதல் நாள் கூட பதவி உயர்வு குடுத்து, மறுநாளே வீட்டுக்கும் அனுப்பிடறா... இப்படி பதவி உயர்வு போடறப்ப சம்பளம் கூடும்... அதனால, பென்ஷன்லயும் சில ஆயிரம் ரூபாய் அதிகரிக்கும் ஓய்...
''அதே நேரம், 'இந்த பதவி உயர்வை காலா காலத்துக்கு வழங்கினா, அடுத்தடுத்த நிலையில் இருக்கறவாளுக்கும் பதவி உயர்வு கிடைக்கும்... நாங்களும் எப்ப பதவி உயர்வு கிடைக்கும்னு பதைபதைப்போட காத்துண்டு இருக்க வேண்டாமே'ன்னு இணை இயக்குநர்கள் எல்லாம் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.