ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த மலையாள நடிகர்! ஷூட்டிங் முடிந்து ஊருக்கு செல்ல திட்டம்! நடந்தது என்ன?

ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த மலையாள நடிகர்! ஷூட்டிங் முடிந்து ஊருக்கு செல்ல திட்டம்! நடந்தது என்ன?
கலாபவன் நவாஸ் என்பவர் நேற்றைய தினம் சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார்

சென்னை: மலையாள நடிகரும் , மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ் என்பவர் நேற்றைய தினம் சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார். அப்போது அவர் திடீரென உயிரிழந்து கிடந்தார். அவருக்கு வயது 51 ஆகிறது. அவரது இறப்புக்கான காரணத்தை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் கலாபவன் நவாஸ் என்பவர் 'பிரகாம்பனம்' எனும் மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்காக இவர் சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

ஆனால் நேற்று படப்பிடிப்பு முடித்ததால், நவாஸ், அறையை காலி செய்ய முடிவு செய்திருந்தாராம். சொந்த ஊருக்குச் செல்ல, நவாஸ், அங்கிருந்த ஹோட்டல் ஊழியரிடம் பேருந்து மற்றும் ரயில் நேரம் குறித்தும் விசாரித்திருக்கிறார்..

அந்த ஊழியரும், விசாரித்து உங்கள் அறைக்கே வந்து சொல்வதாக தெரிவித்தாராம். இதற்காக தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களிடம் நவாஸ் சொன்ன இடத்திற்கு ரயில், பேருந்து எப்போது என கேட்டுக் கொண்டு அதை நவாஸிடம் சொல்ல அவருடைய அறைக்குச் சென்றார்.

அப்போது அங்கு நவாஸ் மயக்கமடைந்து சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். உடனே பதறிய அந்த ஊழியர், சக ஊழியர்களை அழைத்து, நவாஸை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு நவாஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்துவிட்டார் என்றனராம். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நவாஸ் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், நவாஸ் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதையும் கண்டுபிடிக்கப்படவில்லை. சோட்டணிக்கராவில் உள்ள மருத்துவமனையில் நவாஸின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே அவருடைய இறப்புக்கான காரணம் தெரியும் என்றனர். இந்த நிலையில் நவாஸ் இறப்புக்கு, கேரள முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்..

கலாபவன் நவாஸ், மிமிக்ரி கலைஞர், பின்னணி பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் 1995 ஆம் ஆண்டு சைதன்யம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்..

மிமிக்ஸ் ஆக்‌ஷன் 500, ஹிட்லர் பிரதர்ஸ், ஜூனியர் மாண்ட்ரேக், மாட்டுப்பெட்டி மச்சான், அம்மா அம்மாய்யம்மா, சந்தமாமா மற்றும் தில்லானா தில்லானா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், கலாபவன் சக்கர முத்து , சட்டம்பிநாடு, சீனியர் மாண்ட்ரேக் மற்றும் வலியங்கடி, வீரபுத்திரன் , தல்சமயம் ஒரு பெண்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். அது போல் தக்கார்ப்பன் காமெடி, காமெடி ஸ்டார்ஸ் சீசன் 2 உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.