கமலின் அறையில் ஒரே ஒரு நடிகரின் புகைப்படம் இருக்கும்! அவர் யார் தெரியுமா?

சென்னை: கமலின் அறையில் ஒரே ஒருவரின் புகைப்படம் மட்டும்தான் இருக்கும் என கவிஞர் வாலி ஒரு முறை சொல்லியிருக்கிறார். அவர் யார் என்பது தெரியுமா? அந்த நடிகர் என்றால் கமல்ஹாசனுக்கு உயிராம். அவர் இறப்பதற்கு முன்பு கூட கமலுடன் ஒரு படத்தில் நல்ல ரோலில் நடித்துவிட்டுத்தான் இறந்திருக்கிறார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: "தாயில்லாமல் நானில்லை"ன்னு ஒரு படத்தில் சில காட்சிகள் பார்த்திட்டிருந்தேன். அதில் கமல் வீட்டுக்கு ஸ்ரீதேவி ஓடி வந்து விடுவார். அதாவது 'நாடகக் காதல்'. நான் சொல்லும் நாடகக் காதல் 'நாடகத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல்'.
அப்படி கமலும், ஸ்ரீதேவியும் காதலிக்க ஸ்ரீதேவி கமல் வீட்டுக்கு ஓடி வர மைனர் நாகேஷ் ஸ்ரீதேவியை வளைக்கப் பார்ப்பார். துணைக்கு 'பிச்சுவா பக்கிரி' என்கிற ரஜினியை அழைத்து வந்திருப்பார். கமலும்- ரஜினியும் மோதிக் கொள்ள ஸ்ரீதேவி உண்மையை விளக்க ரஜினி நாகேஷை அடிக்கப் பாய்வார்.
ரஜினியிடம், சபலப்பட்டு விட்டதாக நாகேஷ் சொன்னதும் நாகேஷை முகத்துக்கு நேராக தூ என சொல்லி போ என்பார் ரஜினி. ஒரு காமெடியனாக நாகேஷ் திரு திருவென்று விழித்துக் கொண்டு ஓடினாலே அப்போதைய ரசிகர் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். ஆனால் நாகேஷ் ஒரு டயலாக் சொல்வார். "எச்சி வுட்டேன்னு சொல்லு..." என்பார்...குபீரென சிரிப்பை வரவழைக்கும் காட்சி.
இது தான் நாகேஷ். கமல் இருந்தும் ரஜினியோடு இந்தக் காட்சியில் அட்டகாசமாக காமெடி செய்திருப்பார்.
கமலுக்கு நாகேஷ் என்றால் ஏனோ பிரியம் அதிகம். நாகேஷ் போல தன்னால் நடிக்க முடியுமா என்றெல்லாம் அவர் கேட்டுக் கொண்டதுண்டு. பாலச்சந்தருக்கு கமல் என்கிற நடிகர் கிடைக்கும் முன்பே கிடைத்த கமல் தான் நாகேஷ்.
அதனாலேயே நாகேஷுக்காக கே.பி எழுதிய படங்கள் பல வெற்றிகளைப் பெற்றன.
கமல் கூட இந்தக் கதைகளில் நாம் நடிக்கவில்லையே என ஏங்கியதுண்டு. அப்படித்தான் பிற்காலத்தில் 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ் ஏற்ற 'டெட்பாடி' பாத்திரத்தை கமல் அதன் ஹிந்தி ரீமேக்கில் நடித்துப் பார்த்தார்.
அப்போ முற்காலத்தில்?.... முற்காலத்தில் நாகேஷ் நடித்த 'அனுபவி ராஜா அனுபவி' இரட்டை பாத்திரங்களை மலையாளத்தில் 'ஆனந்தம் பரமானந்தம்' என்கிற படத்தில் கமல் தான் ஏற்று நடித்துப் பார்த்துக் கொண்டார். நாகேஷின் தருமி பாத்திரத்தை வேறு யாராவது நடிக்க முடியுமா?.
அப்படி ஒரு நடிகரை சொல்லுங்கள். 'எதிர் நீச்சல்' மாடிப்படி மாது வேறு யார் நடித்திருந்தாலும் அந்தப்படம் வென்றிருக்குமா?. அதே கண்கள் படத்தின் அந்த வீட்டு ஓனர்-டெனன்ட் காமெடிக்கரு தானே 'அவ்வை சண்முகி'யின் முதலியார்- மாமி காமெடி.. 'காதலிக்க நேரமில்லை' செல்லப்பா போல இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பிஸியோ டாக்டர் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறாரே...
நாகேஷ் கொஞ்சம் வயதான பிறகு அவர் இடத்தை சுருளிராஜன் ஆக்ரமித்துக் கொண்ட போது தனக்கு காமெடி வாய்ப்பு இனி வராது என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாற முயற்சிகளை மேற்கொண்டார். "எங்கள் வாத்தியார்" போன்ற சீரியஸ் படங்களில் நடித்தாலும் பெரிய பேசக் கூடிய பாத்திரங்கள் வரவில்லை.
80 முதல் 90 வரை அவர் தடுமாறிய போது கமல் தான் அவரை அழைத்து நல்லக்கதாபாத்திரங்களை தந்தார். அதற்குப்பிறகு தான் நாகேஷுக்கு அழகழகான பாத்திரங்கள் அமைந்தன.
வசூல் ராஜா படத்தின் அந்த இன்னொசன்ஸ் தந்தையாக வேறு யார் நடிக்கக் கூடும்?.
ப்ரபசர் ராவாக அவர் வரும் நம்மவர் பாத்திரமும் அவரது பாலச்சந்தர் பரிமாணம் தானே. மைக்கேல் மதன காமராஜனின் அவினாசியின் தடுமாற்றம், தவிப்பு நாகேஷ் அல்லாது யார் செய்ய முடியும்?. அபூர்வ சகோதரர்களின் வில்லன்கள் நாஸர், டெல்லி கணேஷ், நாகேஷ் எல்லோரும் அதற்குப் பிந்தைய கமல் படங்களில் காமெடி செய்தனர்.
அவ்வை சண்முகியின் ஜோசப் மேக்கப்மேன் பாத்திரம் சட்டென பாலச்சந்தரின் தில்லுமுல்லுவில் ரஜினிக்கு மீசை ஐடியா கொடுத்த நாகேஷ் போல் டிட்டோவாக அமைந்திருப்பது தான் கே.பி-கமல்-நாகேஷ் 'கட்டுத் தீக்குச்சி' தன்மை. கமலின் ஆரம்ப கால படங்களை எடுத்தோமென்றால் இரட்டை பாத்திரங்களில் ஒன்று அல்லது ஏதாவது ஒரு பாத்திரம் நாகேஷ் போலவே நடிப்பில் ஒத்திருக்கும்
கல்யாணராமனில் கல்யாணம், சட்டம் என் கையில் அந்த ரத்னம், தூங்காதே தம்பி தூங்காதேயின் வாட்ச்மேனாக வரும் கமல், எல்லாம் இன்ப மயம் ரிக்ஷாக்காரன் இப்படி நாகேஷை பிரதிபலிக்கும் பாத்திரங்கள் போலவே இருக்கும். சர்வர் சுந்தரம் படத்தில் நடிகனாக நாகேஷ் வந்ததால் உத்தம வில்லனில் நடிகனாகவும் வந்தது பொருத்திப்பார்க்கத்தூண்டுகிறது. இந்த நேரத்தில் நாகேஷ் இல்லாததால் கே.பியை கொண்டு வந்ததும் கமலின் தன்மையை காட்டுகின்றன.
கமலின் ஃபாதர் பிகராக நாகேஷ் இருந்ததாலோ என்னவோ கடைசியாக கமலுக்கு அப்பாவாக 'தசாவதாரம்' படத்தில் நடித்து விட்டு மறைந்து போனார். கவிஞர் வாலி ஒரு முறை சொன்னதுண்டு.
"கமலின் அறையில் ஒரே ஒருவரின் படம் மட்டும் இருக்கும். அது நாகேஷின் படம்..." என்று. ஒரு அற்புதமான கிடைக்க முடியாத கலைஞனை கௌரவிக்க எண்ணற்ற கதாபாத்திரங்களை தந்ததோடு அவன் படத்தை மட்டும் அலுவலகத்தில் வைப்பதை விட வேறு என்ன பெரிதாக செய்ய முடியும்..
கமல்-நாகேஷ் திரும்ப வாய்க்காத ஜோடி....