எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்”.. ஆளுநர் மாளிகை சர்ச்சைக்கு வைரமுத்து கண்டனம்

சென்னை: "ராஜ்பவனில் ஒரு திருவள்ளுவர் தங்கியுள்ளார் போலும். அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள். எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்" என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேசிய மருத்துவ தினத்தையொட்டி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மருத்துவர் தின விழா நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதை தொடர்ந்து ஆளுநரின் எண்ணித் துணிக மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு ஆளுநர் மாளிகை சார்பில் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக சேவையாற்றிய 50 மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அந்த கேடயங்களில் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அதில் 944 ஆவது திருக்குறள் என, "செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு'' என்பது அச்சிடப்பட்டு அதற்கு கீழே, திருவள்ளுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது, தற்போது சர்ச்சையாகி தமிழறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவர் எழுதிய 1330 குறட்பாக்களில் ஆளுநர் மாளிகை குறிப்பிட்ட திருக்குறளை எப்படி தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால் அப்படி ஒரு குறளே இல்லை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ், திருக்குறள் என்று பேசி வரும் நிலையில், இல்லாத திருக்குறளை அச்சிட்டு விருது வழங்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது
இந்நிலையில், இல்லாத வரிகளை திருக்குறள் எனக் குறிப்பிட்டதற்கு ஆளுநர் மாளிகைக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து,
"ஜூலை 13இல்
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அதே நாளில்
ஆளுநர் மாளிகையில்
ஒரு விழா
நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்
மருத்துவர்களுக்கு
வழங்கப்பட்ட
நினைவுப் பரிசில்
944ஆம் திருக்குறள் என்று
அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்
இல்லாத குறளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு
யாரோ ஒரு
கற்பனைத் திருவள்ளுவர்
விற்பனைக் குறளை
எழுதியிருக்கிறார்
இது எங்ஙனம் நிகழ்ந்தது?
ராஜ்பவனில்
ஒரு திருவள்ளுவர்
தங்கியுள்ளார் போலும்
அந்தப்
போலித் திருவள்ளுவருக்கு
வேண்டுமானால்
காவியடித்துக் கொள்ளுங்கள்
எங்கள்
திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.