3 மாதத்தில் கல்யாணம், எங்களுக்கு அந்த வாய்ப்பே கிடைக்கல; எனக்கு அவர் 'ப்ரோ' தான்: சரண்யா மோகன் வருத்தம்!

3 மாதத்தில் கல்யாணம், எங்களுக்கு அந்த வாய்ப்பே கிடைக்கல; எனக்கு அவர் 'ப்ரோ' தான்: சரண்யா மோகன் வருத்தம்!
நடிகை சரண்யா மோகன், தனது திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்..

தமிழில் 'யாரடி நீ மோகினி', 'பஞ்சாமிர்தம்', மகேஷ் சரண்யா மற்றும் பலர்' 'வேலாயுதம்' உள்ளிட்ட சில படங்களில் சரண்யா மோகன் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், பல்வேறு மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகை சரண்யா மோகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, தனது திருமண வாழ்க்கை குறித்து அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

அதில், "என்னுடைய கணவர் பெயர் அரவிந்த் கிருஷ்ணன். அவர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கோவளம் கடற்கரை அருகே எனது கணவரின் மருத்துவமனை அமைந்துள்ளது. எங்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். எங்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் எவ்வாறு சென்றது என்றே தெரியாத அளவிற்கு சட்டென காலங்கள் சென்று விட்டன. ஆர்குட் ஊடகம் மூலமாக தான் எங்கள் இருவருக்கும் இடையே அறிமுகம் கிடைத்தது.

முதலில், திருமணம் செய்துகொள்வதற்கான திட்டம் எங்களுக்கு இல்லை. சாதாரண நண்பர்களாக இருப்போம் என்ற அடிப்படையில் தான், எங்கள் உறவு தொடங்கியது. அதன் பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ளாம் என்று என் கணவர் தான் முதலில் கூறினார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு புரிதலின் காரணமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று பின்னர் முடிவு செய்தோம்.

ஜூலை 12-ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதற்கடுத்து மூன்று மாதங்களில் திருமணம் ஆகிவிட்டது. எங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆன பின்னர், எங்களுடைய நண்பர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில், திருமணத்திற்கு முன்னர் அவரை ப்ரோ என்று தான் நான் அழைத்தேன்.