மகாராஷ்டிரா: தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்ந்து பாஜகவுக்கு நெருக்கடி தர முடியுமா?

மகாராஷ்டிராவில் இந்தி மொழியை கட்டாய பாடமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அரசு அந்த முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டது. முன்னதாக, மராத்தி மொழியை கட்டாயமாக்கும் முடிவுக்கு எதிராக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இருவரும் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், அரசு தன் முடிவை ரத்து செய்துவிட்டதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த பேரணிக்கு பதிலாக, வெற்றிக் கூட்டத்தை அவர்கள் நடத்தினர்.
சிவ சேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே அணி), மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சிலரும் இதில் பங்கேற்றனர்.
"எந்தவொரு சண்டை அல்லது சச்சரவை விடவும் மகாராஷ்டிரா பெரியது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். பாலாசாஹேப்பால் செய்ய முடியாததை, பலர் செய்ய முடியாததை தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார்," என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
"எங்களுக்கு இடையேயான தடையை தானிய விவசாயிகள் நீக்கியுள்ளனர். இப்போது நாங்கள் ஒன்றாக வாழ்வதற்காக ஒன்றிணைந்துள்ளோம். இப்போது நாங்கள் ஒன்றாக இணைந்து உங்களை (பாஜக) வெளியேற்றுவோம்," என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
எனினும், இந்த இருவரும் ஒன்றாக இணையும்போது என்ன நடக்கும், இதன்மூலம் சொல்ல வரும் சேதி என்ன என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன.
அரசியல் ரீதியாக இருவரும் ஒன்றிணைந்தால், தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை எப்படி ஒதுக்குவார்கள் என்ற கேள்வியை சில அரசியல் நிபுணர்களிடம் கேட்டோம். இருவரும் ஒன்றிணைந்ததன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அறியலாம். அதற்கு முன்பு, இந்த கூட்டத்தில் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேவின் பங்கு என்ன என்பது குறித்து புரிந்துகொள்வோம்.
உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கூறியது என்ன?
வோர்லியில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பாஜகவையும் ஏக்நாத் ஷிண்டேவையும் கடுமையாக விமர்சித்தார்.
"'பேடெங்கே டோ கேடெங்கே' (Batenge to Katenge) எனும் முழக்கத்தின் மூலம் மக்களுக்கு இடையே மோதல்களை தூண்டிவிட்டு, மகாராஷ்டிரா மற்றும் மற்ற மாநிலங்களில் பாஜக தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. அரசியலில் பாஜக ஒரு தொழிலதிபர் போன்றது. அவர்கள் பயன்படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுவார்கள்."
இந்துக்கள் பிரிந்து கிடந்தால் கொல்லப்படுவார்கள் என்பதே பாஜக முன்வைக்கும் 'பேடெங்கே டோ கேடெங்கே' முழக்கமா கும்.
நேற்று ஒரு துரோகி 'ஜெய் குஜராத்' என முழக்கமிட்டார். தனது எஜமானர் வரும் போது 'ஜெய் குஜராத்' என்று சொல்லும் ஒருவர் எப்படி மராத்தி மொழிக்கு எப்படி முக்கியத்துவம் அளிப்பார்?" என ஏக்நாத் ஷிண்டே குறித்து உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.
"யாருக்கும் அநீதி இழைக்காதீர்கள். ஆனால், யாராவது உங்களுக்கு எதிராக கையை உயர்த்தினால், அதை அப்படியே இருக்க விடாதீர்கள்," என பாலாசாஹேப் அடிக்கடி கூறுவார். மராத்தி மொழியின் பெயரால் கொடுமைப்படுத்தாதீர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் மகாராஷ்டிராவுக்கு வெளியே ஒரு மராத்தி நபர் எப்போதாவது மற்றவரை நிர்பந்தித்தது உண்டா?"
"நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். ஆனால், நான் மகாராஷ்டிர மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். நாம் எல்லோரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் இப்போது சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தின்போது இணைந்தது போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாஜகவில் உள்ள மராத்தி மக்களும் அதில் இணைய வேண்டும்." என்றார் உத்தவ் தாக்கரே.
"நாங்கள் கொடுமைப்படுத்தவில்லை, ஆனால் எங்களை கொடுமைப்படுத்துபவர்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அனைத்து வேறுபாடுகளையும் புதைத்துவிட்டு, வலுவாக இணைவோம். நம்மை யாரும் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது, மராத்தி முத்திரையை யாரும் அழிக்க முடியாது என்பதை மராத்தியை நேசிப்பவர்கள் மறக்கக் கூடாது." என்று அவர் கூறினார்.