பக்கத்து வீட்டுக்காரரை பயமுறுத்த வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு, எலும்புகளை வைத்தவர் கைது

சென்னை: வடபழனியில் பக்கத்து வீட்டுக்காரரை பயமுறுத்துவதற்காக அவரது வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு, எலும்புகளை வைத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வடபழனி சோமசுந்தர பாரதி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (51).
நேற்று முன்தினம் காலை இவர் தனது வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது, வாசலில் மனித மண்டை ஓடு மற்றும் எக்ஸ் வடிவத்தில் எலும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது, பக்கத்து வீட்டுக்காரரான அப்சர் அலி (24) என்பவர் மனித எலும்புகளை வைத்து சென்றது தெரியவந்தது.
இதுபற்றி கருணாகரன் கேட்டபோது, அப்சர் அலி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். வீட்டிலிருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் கருணாகரன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அப்சர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.