மயிலாப்பூரில் 3 கோடி மதிப்புள்ள நிலம்.. உரிமையாளருக்கே தெரியாமல் வங்கியில் அடமானம் வைத்த நபர்!

மயிலாப்பூரில் 3 கோடி மதிப்புள்ள நிலம்.. உரிமையாளருக்கே தெரியாமல் வங்கியில் அடமானம் வைத்த நபர்!
போலி நிலப்பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து ரூ. 20 கோடி வரை சுருட்டிய மோசடி மன்னனை போலீசார் கைது செய்து

சென்னை: போலி நிலப்பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து ரூ. 20 கோடி வரை சுருட்டிய மோசடி மன்னனை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இதுவரை 10 முறை சிறைக்கு சென்ற இந்த மோசடி மன்னன், மீண்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இவர் அப்படி என்ன செய்தார்.. மோசடியை போலீசார் கண்டுபிடித்தது எப்படி என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்..

மதுரை சம்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). எஸ்.எஸ்.எல்.சி வரை மட்டுமே படித்துள்ள இவர் போலியான நில பத்திரங்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவராம். போலி நில பத்திரங்களை உண்மையான நிலப்பத்திரங்கள் போல் ஜோடித்து வங்கிகளில் கோடிகளை கடனாக பெற்று சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்..

என்ன செய்தாலும் திருந்த மாட்டேன்

இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் மட்டும் 10 வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 முறைக்கு மேல் சிறைக்கு சென்று இருக்கிறார். குண்டர் சட்டத்திலும் போலீசார் இவரை சிறையில் அடைத்துள்ளனர். நீங்க என்ன செய்தாலும் நான் திருந்த மாட்டேன் என்பது போல, குமார் தனது மோசடி பழக்கத்தை கைவிடாமல் மோசடி மன்னனாக வலம் வந்துள்ளார்.

மொத்தம் குமார் ரூ. 20 கோடி வரை வங்கிகளில் கடனாக பெற்று மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளது. இவருடைய கூட்டாளிகளான கலைச்செல்வி, ஸ்ரீதர், பிரசாந்த் ஆகியோர் ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 11-வது முறையாக மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த தாராசந்த் என்பவரின் தாயாருக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடத்தை போலி பத்திரங்கள் மூலம் வங்கி ஒன்றில் அடமானம் வைத்து குமார் ரூ.3.3 கோடி மோசடி செய்துள்ளார்.

வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு?

இதையடுத்து போலீசார், மோசடி குமாரை கைது செய்தனர். இவருடைய முக்கிய கூட்டாளி ராஜசேகர் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவருடைய மோசடி செயலுக்கு வங்கி அதிகாரிகள் சிலரும் உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வங்கி அதிகாரிகளுக்கு 3 சதவீதம் கமிஷன் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது..

எனவே இந்த வழக்கில் சில வங்கி அதிகாரிகளும் சிக்கலாம் என சொல்லப்படுகிறது. பலமுறை கைதாகியும் திருந்ததாக குமார் இந்த முறை கையும் களவுமாக சிக்கியிருப்பதால் உரிய சட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

மற்றொரு மோசடி சம்பவம்

இதற்கிடையே, சென்னையில், ரூ.34 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:- சென்னை அடுத்த சோழவரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரை வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜான் வில்சன் தான் ஆப்பிரிக்க நாட்டில் தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அந்த மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய ஆட்கள் தேவை என கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த மருந்துக்களை கொள்முதல் செய்வதற்காக ஜான் வில்சன் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக ஜெகதீசன் ரூ.34 லட்சம் வரை அனுப்பியுள்ளார். ஆனால் மருந்தை அனுப்பாமல் ஜான் வில்சன் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து ஜெகதீசன் மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்தார். போலீசார் ஜான் வில்சனை கைது செய்தனர்..

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜான் வில்சன் மோசடி செய்தது உறுதியானதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.