டிசிஎஸ் ஊழியர்களே இனியும் காத்திருக்க வேண்டாம்.. சோஹம் பரேக் கொடுத்த அட்வைஸ்..!!

டிசிஎஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் சுமார் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது
டிசிஎஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் சுமார் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. இது இந்நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கையின் சுமார் 2% ஆகும். இந்த முடிவு, நிறுவனத்தை எதிர்காலத்திற்கு தயாரான அமைப்பாக மாற்றும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கம் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, அதன் சந்தை மதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு நாள்களில் நிறுவனம் ரூ.28,148.72 கோடி மதிப்பை இழந்தது. நேற்று (ஜூலை 29) BSE-வில் TCS பங்குகளின் விலை 0.73% குறைந்து ரூ.3,056.55 ஆக இருந்தது. அதேபோல் NSEயிலும் இதே வீழ்ச்சி பதிவாகியது.
உலகளாவிய அளவில் 6.13 லட்சம் பேருக்கு மேல் பணியாற்றும் டிசிஎஸ் நிறுவனத்தில் இப்போது AI சார்ந்த தீர்வுகள், புதிய சந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திசை மாற்றி வருகிறது. இதனால், புதிய திசைக்கு பொருந்தாத வேலைகளை நீக்குவது அவசியமாக உள்ளது.
தற்போது TCS நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தகவல் தொழில்நுட்ப துறையில் பெரிம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், ஐடி அமைச்சகம் TCS நிறுவனத்துடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பணி நீக்கம் பற்றிய அறிவிப்புக்குள்ளான பின்னணி காரணம் என்ன என்பதை கண்டறிய அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, 12,000 ஊழியர்களின் பணிநீக்க அறிவிப்பை தொடர்ந்து அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஊழியர்களை பணியில் அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கான சம்பள உயர்வை மொத்தமாகவே நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐடி ஊழியர்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு பலரையும் பீதியடைய செய்துள்ளது.
இந்நிலையில் தான், அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பல வேலைகள் செய்த இந்தியாவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சோஹம் பரேக், டிசிஎஸ் நிறுவனத்தின் திடீர் பணிநீக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், "நீங்கள் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வேலை வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "கடுமையாகவும், விரைவாகவும் உழைக்க வேண்டும். உங்கள் திறன்களே உங்கள் சக்தி" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சோஹம் பரேக்கின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணியிட சுருக்கங்கள் மற்றும் வேகமான மாற்றங்களால் பாதிக்கப்பட்ட தொழில்நுட்பத் துறையில் இந்தப் பதிவு தீவிரமான விவாதத்தை உண்டாக்கியுள்ளது. பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை நேர்த்தியான மற்றும் சரியான நினைவூட்டலாகக் கருதுகின்றனர்.