49 வயதில் எம்பிபிஎஸ் சீட்.. நிஜமான 31 வருட கனவு.. மகளுடன் சேர்ந்து படிக்கப்போகும் பெண் நெகிழ்ச்சி!

49 வயதில் எம்பிபிஎஸ் சீட்.. நிஜமான 31 வருட கனவு.. மகளுடன் சேர்ந்து படிக்கப்போகும் பெண் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகளுக்குப் பின் தனது கனவு நிஜமாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்...

சென்னை: தமிழ்நாட்டில் 49 வயதில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றப் பெண் ஒருவர், விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இணைய உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1994ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட போது பிசியோதெரபிஸ்ட் கிடைத்ததாகக் கூறிய அவர், 31 ஆண்டுகளுக்குப் பின் தனது கனவு நிஜமாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்..

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 6,600 எம்பிபிஎஸ் இடங்களும், 1,583 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இதில் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் அளிக்கப்படுகிறது. அதேபோல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,144 எம்பிபிஎஸ் இடங்களும், 515 பிடிஎஸ் இடங்கள் உள்ளன..

இதில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வடை நடைபெற்றது. சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஜூலை 25ஆம் தேதி தகுதியானவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் சுற்றுக் கலந்தாய்வு தொடங்கியது.

இந்த நிலையில் 49 வயதான பெண் ஒருவருக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அவர் பேசுகையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு என் மகள் தான் முக்கியமான காரணம். எனது மகள் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தாள். அவரின் மெட்டிரியலை வைத்துப் படித்தேன். 6 மாதங்களாக மட்டுமே நீட் தேர்வுக்குப் படித்தேன்.

என் மகளின் ஆதரவுடன் தான் இந்த அளவிற்கு வந்துள்ளேன். விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்திருக்கிறது. அனைத்து வகையிலும் என் மகள் ஆதரவாக இருந்தார். எனக்கு 1994ஆம் ஆண்டு தகுதித்தேர்வு மூலமாக நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு பிசியோதெரபி மட்டுமே கிடைத்தது. அதனால் அதனைப் படித்தேன். ஆனால் எம்பிபிஎஸ் ஆசை இருந்து வந்தது..

திடீரென நீட் தேர்வு எழுதலாம் என்ற எண்ணம் வந்தது. அதன் மூலமாக ஆசையை நிறைவேற்றலாம் என்று தோன்றியது. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு இது மகிழ்ச்சியான விஷயம். என் கணவர் வழக்கறிஞர். என் மகளும் எம்பிபிஎஸ் இணைய போகிறார். அதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பிசியோதெரசிஸ்டாக தனியாக கிளினிக் நடத்தி வருகிறேன்.

எம்பிபிஎஸ் இணைந்த பின் மாலை நேரத்தில் கிளினிக்கை கவனித்து கொள்வேன். நீட் தேர்வுக்குப் படிப்பதற்கு என் மகளாக உதவியாக இருந்தார். முதல்முறையாக நீட் தேர்வு எழுதியதில் 147 மதிப்பெண்கள் பெற்றேன். பிடபிள்யூடி பிரிவில் சீட் கிடைத்திருக்கிறது. நீட் தேர்வு கடினமான தேர்வாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்..