2 ஏக்கர், ஆண்டுக்கு ரூ.8,00,000... திராட்சை சாகுபடியில் தித்திக்கும் லாபம்!

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையும், மண்வளமும் திராட்சை சாகுபடிக்கு ஏற்றவையாக இருந்து வருகின்றன. இதனால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலர் சமீபகாலமாக திராட்சை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில்தான், தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துக்காளை, 2 ஏக்கர் பரப்பில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து, நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.
பொதுவாக, திராட்சை சாகுபடி என்று சொன்னாலே, அதிக அளவு ரசாயன உரங்கள் மற்றும் வீரியமிக்க பூச்சிக்கொல்லி பயன்படுத்துவார்கள் என்ற கருத்து பரவலாக நிலவும் நிலையில், விவசாயி முத்துக்காளையோ… இயற்கை இடுபொருள் களைப் பயன்படுத்தி, திராட்சை சாகுபடியில் வெற்றிகரமாக விளைச்சல் எடுத்து வருவது கவனம் ஈர்க்கிறது...
முத்துக்காளையின் திராட்சை சாகுபடி அனுபவம் குறித்து அறிந்துகொள்ள ஒரு காலைப்பொழுதில் அவருடைய தோட்டத்துக்குச் சென்றோம். பரந்து விரிந்த பந்தலில் செழிப்பாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்த கொடிகளில்... திராட்சைக் கொத்துகள், காற்றில் அசைந்தாடிக்கொண்டி ருந்தன. அறுவடைப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த முத்துக்காளையும் அவரின் மனைவி மாரியம்மாளும் நம்மை கண்டதும் இன்முகத்துடன் வரவேற்றனர்.
உற்சாகமாகப் பேசத் தொடங்கிய முத்துக் காளை, “விவசாயம்தான் எங்க குடும்பத்தோட வாழ்வாதாரம். ஏழாம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு விவசாயத்துல இறங்கிட்டேன். எங்க குடும்பத்துக்கு 3 ஏக்கர் சொந்த நிலம் இருக்கு. பல வருஷங்களா ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தேன். பருத்தி, மிளகாய், மல்லிப் பூ, அரளிப் பூ, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்றது வழக்கம். எங்க ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம்ங்கற விவசாயி ஏதோ புதுமையா வித்தியாசமா விவசாயம் செய்றாருனு 10 வருஷங்களுக்கு முன்னாடி ஊர் முழுக்க ஒரே பேச்சா இருந்துச்சு. அவரை சந்திச்சு பேசினப்பதான், இயற்கை விவசாயம்ங்கற ஒரு வழிமுறை இருக்குறதையும், இதோட மகத்துவங்களையும் தெரிஞ்சுகிட் டேன். அதுக்குப் பிறகு, ரசாயன இடுபொருள் களின் பயன்பாட்டை படிப்படியா குறைக்க ஆரம்பிச்சேன். நாளடைவுல தக்காளி, கத்திரி உள்ளிட்ட காய்கறிகளை முழுமையா இயற்கை விவசாயத்துலயே சாகுபடி செஞ்சேன். 7 வருஷத்துக்கு முன்னாடி, இயற்கை விவசாயத்துல எலுமிச்சை பயிர் செஞ்சேன்.