எதிர்பார்க்காத வேகமா இருக்கே! சென்னை, கோவை, சேலத்திற்கு ஒரே நாளில் ஜாக்பாட்.. ரெடியான RRTS ரயில்!

சென்னை: பாலாஜி ரயில் ரோடு நிறுவனம், தமிழ்நாட்டில் மூன்று RRTS (Regional Rapid Transit System) வழித்தடங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. அந்த மூன்று வழித்தடங்கள்: சென்னை - காஞ்சிபுரம் - வேலூர், சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் மற்றும் கோயம்புத்தூர் - திருப்பூர் - ஈரோடு - சேலம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறு அறிக்கைகளை பாலாஜி ரயில் ரோடு நிறுவனம் தயாரிக்கும்.
சென்னை மற்றும் கோயம்புத்தூரில் RRTS ரயில்களை இயக்குவதற்கான வழித்தடங்களை கண்டறிந்து, விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report - DPR) தயாரிப்பதற்காக ஆறு ஏலதாரர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் இருந்து ஒரு ஏலதாரர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் DPR தயாரிக்கும் பணிகள் ஒப்படைக்கப்படும்
தமிழக அரசின் கடன் பட்ஜெட் அறிவிப்பின்படி, ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில்வே ரயில் அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மூன்று வழித்தடங்களில் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility Report) தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விட்டுள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "வட இந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள், தமிழ்நாட்டிலும் அமைக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்," என்று தெரிவித்தார்.
RRTS திட்டத்திற்கான வழித்தடங்கள்
RRTS ரயில் திட்டம் பின்வரும் வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது:
சென்னை - திண்டிவனம்
சென்னை - காஞ்சிபுரம் - வேலூர்
கோயம்புத்தூர் - சேலம்
RRTS என்றால் என்ன?
RRTS (Regional Rapid Transit System) என்பது அதிவிரைவு மண்டல ரயில் போக்குவரத்து முறையாகும். இது இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான திட்டமாகும். நகரங்களையும், புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் அதிவேக ரயில் போக்குவரத்து அமைப்பாக இது இருக்கும். முதன்முதலில் டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும்.
அதிவேக ரயில்: மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும்.
வசதிகள்: ஏசி கோச்சுகள், Wi-Fi, தானியங்கி கதவுகள் (Automatic doors).
வேகமான பயணம்: மெட்ரோவிற்கு மாற்றாக, நீண்ட தூரப் பயணிகளுக்கு ஏற்றது.
சுற்றுச்சூழல்: மின்சாரத்தில் இயங்குவதால், குறைந்த கார்பன் உமிழ்வு இருக்கும்.
டெல்லி-NCR பகுதியில், முதல் கட்டமாக டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழித்தடங்களில் RRTS திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில், ₹63,246 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டம் 118.9 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கி.மீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கி.மீ சுரங்கப்பாதையில், தற்போது 19 கி.மீ சுரங்கப்பாதை மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது.
காரிடார் 3ல் ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன் டெண்டர் காரணமாக, பணிகள் தாமதமாகி உள்ளன. அதிகாரிகள் விரைவில் போரூர்-கோடம்பாக்கம் பாதையை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II இல், மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருட இறுதியில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.