வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...’ - திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷங்களை முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.
அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடிக்கு கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. கடந்த 1-ம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
கரியமாணிக்க விநாயகர், பார்வதி அம்மன், மூலவர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் உள்புறம் தந்திரி சுப்பிரமணியரு தலைமையிலும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரமாண்ட யாகசாலையில் 71 ஓம குண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் செல்வம் சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் ராஜா சிவாச்சாரியார் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர். கடந்த சனிக்கிழமை மாலை முதல் திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாளுக்கு தனியாக 5 ஓம குண்டங்கள் வைத்து பட்டாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு கும்பங்கள் எடுத்து கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காலை 6.22 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.