புதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்: சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால் இடையே கடும் போட்டி

சென்னை: அடுத்த மாதத்துடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியல் தயாராகியுள்ளது. இதில் சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காவல் துறையில் 14 டிஜிபி பணியிடங்கள் இருந்தாலும் சட்டம் - ஒழுங்கு டிஜிபியே தலைமை டிஜிபியாகவும், காவல் படை தலைவராகவும் செயல்படுவார். தற்போது பதவியில் உள்ள சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, அடுத்த டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக சட்டம் - ஒழுங்கு டிஜிபிக்கு தகுதியான 8 பேர் பட்டியலை தயார் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இந்த பட்டியலில் 1990-ல் தேர்வான சீமா அகர்வால், 1992-ல் தேர்வான ராஜீவ் குமார், அதே ஆண்டில் தேர்வான சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னி பெருமாள், 1994-ல் தேர்வான மகேஷ் குமார் அகர்வால், அதே ஆண்டில் தேர்வான வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் உள்ளனர்.
.
இவர்களுடன் 1988-ல் தேர்வான சஞ்சய் அரோரா, 1989-ல் தேர்வான பிரமோத் குமார் ஆகியோரும் உள்ளனர். இந்த இருவருடன் அபய் குமார் சிங்கின் பதவி காலமும் 6 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இவர்கள் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை. மீதம் உள்ள 8 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் டெல்லிக்கு அனுப்பப்பட உள்ளது.
தமிழக அரசு அனுப்பும் 8 பேர் கொண்ட பட்டியலில் தகுதியுள்ள 3 பேரை தேர்வு செய்து மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பும். அவர்களில் ஒருவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபியாக (சட்டம் - ஒழுங்கு) நியமிப்பார். சீனியாரிட்டி அடிப்படையில் டி.ஜி.பிக்கள் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரும் முதலிடத்தில் உள்ளனர்.
இந்த மூன்று அதிகாரிகளும் மத்திய அரசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் 3 பேரையும் மத்திய அரசு பரிசீலித்து தமிழக அரசுக்கு அனுப்பலாம். பணி அனுபவம், தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் இந்த 3 பேர் பட்டியலில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் இடையே புதிய டிஜிபிக்கான போட்டி உள்ளதாகவும் அதில் சந்தீப் ராய் ரத்தோர் முந்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் போலீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் முடிவு தெரிந்துவிடும்.