அலைமோதும் கூட்டம்..! சென்னையில் முதல் நாளில் 7,518 பேர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மனு

முகாம்களுக்கு காலையில் இருந்தே பொது மக்கள் ஏராளமான பேர் வந்து மனு கொடுத்தனர்.
மனுக்களை வாங்கும் அதிகாரிகள் 45 நாட்களில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களுடைய இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று தண்டையார்பேட்டை சி.எச்.எஸ்.எஸ். படேல்நகர் பள்ளி ஸ்ரீமகாவீர் ஜெயின் பவன் திருவல்லிக்கேணி உள்பட வார்டு 25, வார்டு 76, 109, 114, 143, 168 ஆகிய 7 இடங்களில் முகாம் நடந்தது.
இந்த முகாம்களுக்கு காலையில் இருந்தே பொது மக்கள் ஏராளமான பேர் வந்து மனு கொடுத்தனர்.
அதிலும் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனு கொடுத்த னர். நீண்ட வரிசையில் பெண்கள் வெயிலில் காத்துக் கிடந்து விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இது தவிர ரேஷன் அட்டை, ஆதார் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்க, பெயர் சேர்க்க- நீக்க, முகவரி மாற்ற விண்ணப்பித்தனர். முக்கியமாக ஆன்லைன் பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் குறித்தும் விண்ணப்பம் கொடுத்தனர்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,949 மனுக்கள் முகாம்களில் பெறப்பட்டு உள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 7,518 பெண்கள் மனு கொடுத்து உள்ளனர்.
அதில் 25-வது வார்டில் 856 பேர்களும், வார்டு 38-ல் 1432 பேர், வார்டு 76-ல் 822 பேர், வார்டு 109-ல் 1435 பேர், வார்டு 114-ல் 905 பேர், வார்டு 143-ல் 1230 பேர், வார்டு 168-ல் 838 பேர் என மொத்தம் 7518 பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னையில் இன்று வார்டு 1, 20, 79, 94, 167, 179 ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் வாங்கப்பட்டது. காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.
எண்ணூர் விநாயகர் கோவில் அருகில், மணலி மண்டப அலுவலகம், அம் பத்தூர் விஜயலட்சுமிபுரம், வில்லிவாக்கம் சிட்கோ நகர், நங்கநல்லூர் ஸ்கேட்டிங் மையம், திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மனுக்களை வாங்கும் அதிகாரிகள் 45 நாட்களில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொறுமையுடன் பொது மக்களுக்கு பதில் அளித்தனர்.