1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு - கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!

பெங்களூரு: பெங்களூரு அருகே 1777 ஏக்கர் விவசாய நிலத்தை விண்வெளி பூங்காவுக்காக கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதனை எதிர்த்து 1198 நாட்கள் தொடர்ந்து போராடிய விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என அம்மாநில அரசு கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக தேவனஹள்ளியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1,777 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது. இதற்காக விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு, வேலை வாய்ப்பு, மாற்று நிலம் ஆகியவற்றை வழங்குவதாக தெரிவித்தது.
இதனை எதிர்த்து விவசாய சங்க கூட்டமைப்பினர் 1198 நாட்களாக உண்ணாவிரதம், சாலை மறியல், பேரணி என தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த 12-ம் தேதி பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று, விண்வெளி பூங்கா அமைப்பதற்காக 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிடுகிறது. அதற்கான அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அதேவேளையில் சில விவசாயிகள் தங்களின் நிலத்தை தாமாக முன்வந்து வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அந்த நிலங்களை கையகப்படுத்தி, அதனை தொழில் வளர்ச்சிக்கு அரசு பயன்படுத்தும்.