விவாகரத்து வழக்குகளில்.. செல்போன்களின் ரகசிய பதிவு உரையாடல்களை ஆதாரமாக ஏற்கலாம்: உச்ச நீதிமன்றம்

டெல்லி: விவாகரத்து வழக்குகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவன் - மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளின் போது, மனைவிக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
விவாகரத்து வழக்குகளில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட மனைவியின் தொலைபேசி அழைப்புகளை ஆதாரமாகப் பயன்படுத்துவதற்கு தடை விதித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
செல்போனில் ரெக்கார்டு செய்த கணவர்
மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போன் அழைப்புகளை பதிவு செய்வது ஒருவரின் அடிப்படை தனியுரிமை மீறும் செயல் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதனை ரத்து செய்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவியின் செல்போன் அழைப்புகளை ரகசியமாக கணவர் ரெக்கார்டு செய்து அதை ஆதாரமாக சமர்பித்ததை பதிண்டா குடும்ப நல நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், பஞ்சாப் ஹரியானா நீதிமன்றம், இது அடிப்படை தனியுரிமையை மீறும் செயல் என உத்தரவிட்டு, ரகசியமாக பதிவு செய்யப்பட்ட அழைப்பு விவரங்களை ஆதாரமாக ஏற்க முடியாது எனக் கூறியது.
நம்பிக்கையின்மை அதிகரிப்பு
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிவி நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திரா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:- திருமண பந்தத்தில் துணைவர்கள் ஒருவரை ஒருவர் ரகசியமாக உளவு பார்க்க ஆரம்பித்துவிட்டால் அது உறவில் முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறியாகும்.
நம்பிக்கையின்மையை அதிகரித்து இருப்பதை காட்டுகிறது. தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சினைகளில் இதுபோன்ற ரகசியமாக பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்கள்தான். இதில் எந்த ஒருதனியுரிமையும் மீறப்பட்டதாக கருதவில்லை.
தனியுரிமை மீறல் எதுவும் இல்லை
இந்திய சாட்சியச் சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ், தம்பதியினருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும், அதே சட்டத்தின் விதிவிலக்குகளுடன் படித்தால் மட்டுமே முழுமையடையும். இதன் மூலம், சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், இந்த வழக்கில் தனியுரிமை மீறல் எதுவும் இல்லை என நீதிமன்றம் கருதுகிறது" என நீதிபதிகள் கூறினர்.