பரமக்குடி ராமநாதபுரம் இடையே நான்கு வழி சாலை... பிரதமரின் அசத்தல் அப்டேட்..

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 4 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய விளையாட்டுக் கொள்கை 2025, ரூ. 1 லட்சம் கோடி நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு, புதுமை திட்டம், வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 4 வழிச்சாலைக்கான கட்டுமான திட்டம் என 4 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்து இருந்தார். தமிழகத்தின் பரமக்குடி ராமநாதபுரம் வரை 46.7 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.1853 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த நான்கு வழிச்சாலை திட்டம் அமலுக்கு வந்தால் வாகன வேகம் மணிக்கு 50 கி.மீ., என்பது 80 கி.மீ., உயரும். பயண நேரம் 60 நிமிடங்களில் இருந்து 35 நிமிடங்களாக குறையும். விபத்துகள் குறையும்.
இனி இது 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த சாலை விரிவாக்கமானது, 5 தேசிய நெடுஞ்சாலைகள், 3 மாநில நெடுஞ்சாலைகள், மதுரை, ராமேசுவரம் ஆகிய 2 ரயில் நிலையங்கள், பாம்பன், ராமேசுவரம் ஆகிய 2 சிறு துறைமுகங்களை இணைப்பதாக இருக்கும்.