இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!
பயனுள்ள ஏற்பாடு!

பயனுள்ள ஏற்பாடு!

செ ன்னையில், என் மகள் தன் குடும்பத்துடன் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டின் அசோசியேஷனில், பயனுள்ள ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றனர்.

மக்கும், மக்கா குப்பைகளை பிரித்து, நாம் அதற்கான குப்பை தொட்டியில் கொட்டி விட வேண்டும். பின் மக்கும் குப்பைகளை, 'ரீ-சைக்கிளிங்' முறையில் மாற்றி, அதற்கென இருக்கும் நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றனர்.

அதோடு, அப்பார்ட்மென்ட்டை சுற்றி அரைநெல்லி, மாமரம், வேப்ப மரம், கொய்யா மரம் போன்றவைகளை நட்டு, அதை நல்லபடியாக பராமரித்து வருகின்றனர்.

மேலும், முதலுதவி அறையில், மருத்துவமனையில் உபயோகப்படுத்தப்படும், 'ஸ்ட்ரெச்சர்' ஒன்றை வாங்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கேட்டதற்கு, 'திடீரென வயதானவர்கள் உடல்நிலை பாதித்து, மருத்துவமனைக்கு போக நேரும் போது, 'லிப்டு' வேலை செய்யாமல் போய் விட்டாலோ அல்லது அவர்கள் அப்பார்ட்மென்ட்டில் இருந்து, 'லிப்டு' வரை கூட அதை உபயோகப்படுத்தி கொள்வதற்காக வைத்துள்ளோம்...' என்றனர்.

உண்மையிலேயே இந்த ஏற்பாடுகள் மிக அருமையானதாக தோன்றியது. மற்ற அப்பார்ட்மென்ட் அசோசியேஷன்களும் இது போன்ற வசதிகளை செய்யலாமே!..

பி.எஸ்.வெண்பா, சிதம்பரம்.

சுற்றுச்சூழலுக்கான சிறு முயற்சி!

நா னும், என் மனைவியும் உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில், பழங்கள் வாங்கி செல்லலாம் என, ஒரு பழக்கடையில் வண்டியை நிறுத்தினோம். கடையில், 'துணி பை கொண்டு வருபவர்களுக்கு, 2 ரூபாய் தள்ளுபடி' என்ற வாசகம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

இது குறித்து, அந்த கடைக்காரரிடம் விசாரித்தோம்.

'பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக, இந்த சிறு முயற்சி. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் துணிப்பை எடுத்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கும் சிறிய அளவில் லாபம் கிடைக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான என்னுடைய பங்கு இது என்ற மன மகிழ்ச்சியும் கிடைக்கிறது...' என்றார்.

அவருடைய இந்த நல்ல நோக்கத்தை பாராட்டிய நாங்கள், எங்களிடம் இருந்த துணி பையை எடுத்து வந்து, பழங்களை வாங்கி சென்றோம்.

காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகள் எல்லாம் இந்த மாதிரியான சிறிய அறிவிப்புகளை வழங்கினால், மக்கள், துணி பைகளை அதிகம் பயன்படுத்த துாண்டப்படுவர். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு, வருங்கால சந்ததிகளுக்கு சுத்தமான வாழ்க்கை முறை கிடைக்கும்.

—  மோனிகா கார்த்திக் ராஜா, சென்னை.

அனைவரையும் கவர்ந்த தாத்தா - பாட்டி!

எ ன்னுடைய அலுவலக நண்பர் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அக்குடியிருப்பில், 75 வயதை கடந்த, முதிய தம்பதியர் வசிக்கின்றனர்.

அவர்களுடைய, ஒரே மகளை, வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மகளின் குடும்பம் அருகில் இல்லையென்று, ஒரு போதும் அவர்கள் தனிமையை பற்றி புலம்பியதில்லை. பேரக் குழந்தைகளுடன் வீடியோ அழைப்பில் உற்சாகமாக உரையாடுவர்.

தம்பதியர் இருவருமே, தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்கள். தங்கள் அப்பார்ட்மென்ட் பால்கனியில் செடிகளை வளர்ப்பதோடு, அடுக்குமாடி மொட்டை மாடியில், சிறு காய்கறி தோட்டமும் அமைத்துள்ளனர்.

கத்தரி, தக்காளி, புதினா, கொத்தமல்லி என பயிரிட்டு, அறுவடை செய்து குடியிருப்புவாசிகளுடன் இலவசமாகவே பகிர்ந்து கொள்வர்.

பழந்தமிழ் இலக்கியம் கற்பிப்பதிலும் நாட்டம் கொண்டவர், பெரியவர். வார இறுதி நாட்களில், குடியிருப்பிலுள்ள மாணவர்களுக்கு, திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் பற்றி, எளிமையாக விளக்குவார்.

பாட்டி, கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவர். அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு, காகிதக் கலை, மணிகள் கோர்ப்பது போன்றவற்றை சொல்லிக் கொடுப்பார்.

மகள் உடன் இல்லையே என வாட்டமுறாமல், அண்டை அயலாருடன் அன்பு பாராட்டி, நட்பு கொண்டு, மகிழ்வோடு வாழ்ந்து வருகின்றனர்.

செ.விஜயன், சென்னை.