ரூ.23 லட்சத்தை எடுத்து வை.. அப்போ தான் வீட்டு சாவி வரும்....

பெங்களூர்: பெங்களூரில் வாடகைக்கு வீடு எடுப்பது குறித்த நெட்டிசன்களின் புலம்பல்களை நாம் பார்த்திருப்போம். அப்படியொரு புலம்பல் பதிவு தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது அங்கு ஒரு வீட்டிற்கு அதன் உரிமையாளர் கேட்ட வைப்புத் தொகை தலைச் சுற்றும் அளவுக்கு இருந்துள்ளது. இதைக் கேட்டு அவர் ஒரு நிமிடம் ஆடிப்போனாராம். இது குறித்து நாம் பார்க்கலாம்...
கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் வாடகைக்கு வீடு எடுப்பதே ஒரு பெரிய பஞ்சாயத்தாகவே இருக்கிறது. அங்கு ஓனர்கள் போடும் கண்டிஷன்களை எல்லாம் கேட்டால் நிச்சயம் தலையே சுற்றிவிடும். அங்கு வாடகைக்கு வீட்டைப் பிடிப்பதே ஒரு பெரிய வேலை. ஏதோ நுழைவுத் தேர்வுக்குக் கேட்பதைப் போல அவ்வளவு கேள்விகளைக் கேட்பார்கள்....
வாடகை வீடு
இப்படி பெங்களூரில் வாடகை வீடுகளில் இருக்கும் வகை வகையான கட்டுப்பாடுகள் நம்மை மிரள வைக்கும். சமூக வலைத்தளங்களில் பார்த்தாலே இது நமக்குத் தெளிவாகப் புலப்படும். நெட்டிசன்கள் புலம்பித் தள்ளி இருப்பார்கள். அப்படியொரு வீட்டின் உரிமையாளர் கேட்ட அடன்வான்ஸ் தொகை குறித்த விவரங்களே இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது....
ரூ.23 லட்சமாம்
பெங்களூரில் ஒரு தனி வீடு, அதாவது இண்டிபெண்டன்ட் ஹவுஸை வாடகைக்குப் பார்த்துள்ளார் அந்த நெட்டிசன். அந்த வீட்டிற்கு 12 மாத வாடகை, அதாவது ₹23 லட்சத்தை வைப்புத் தொகையாக கேட்டுள்ளனர். இதைக் கேட்டதும் அந்த நெட்டிசன் அதிர்ந்து போய்விட்டார். இதைத் தான் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
4,500 சதுர அடி பரப்பளவில், அனைத்து வசதிகளுடன் கூடிய அந்த 4BHK வீட்டிற்கு மாத வாடகையாக ₹2.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது கூட ஓகே தான். பெங்களூரில் முக்கியமான இடங்களில் இதுபோன்ற இண்டிபெண்டன்ட் ஹவுஸ்களுக்கு வாடகை இந்தளவுக்குத் தான் இருக்கும். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வைப்புத் தொகை தான் அதிர வைப்பதாக இருக்கிறது. இது பெங்களூரில் உள்ள வீட்டு ஓனர்களின் பேராசையைக் காட்டுவதாகவே அந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்....
ரொம்ப ஓவர்
நியூயார்க், டொராண்டோ, சிங்கப்பூர், லண்டன் மற்றும் துபாய் போன்ற உலகின் முக்கிய நகரங்களில் கூட வைப்புத் தொகை என்பது பொதுவாக இரண்டு மாத வாடகை அல்லது ஆண்டு வாடகையில் 5% முதல் 10% வரை மட்டுமே இருக்கும். ஆனால் பெங்களூரில் ஓராண்டு வாடகையை மொத்தமாக வைப்புத் தொகையாக கேட்பதெல்லாம் ஓவர் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர்.
இந்தத் தொகை நெட்டிசன்கள் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. அதேநேரம் பெங்களூருவில் வசிப்பவர்கள் சிலர், பிரீமியம் வீடுகளுக்கு 12 மாத வைப்புத் தொகை என்பது ஒன்றும் புதிது இல்லை என்று கூறியுள்ளனர். பொதுவாக 5-6 மாத வாடகையை வைப்புத் தொகையாகக் கேட்பார்கள்.. ஆனாலும், 12 மாத வாடகையும் சில இடங்களில் வசூலிக்கவே செய்வதாக பெங்களூர்வாசிகள் கூறுகிறார்கள். வாடகை வீடுகளின் தேவை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் நெட்டிசன்கள்!.
காரணம் இதுதான்
அதிகம் சம்பாதிக்கும் ஐடி ஊழியர்களே நிலைமை இந்தளவுக்கு மோசமாகச் செல்லக் காரணம் என நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "பேரம் பேசாமல் இருந்தால், உரிமையாளர்கள் அதிக பேராசைப்படுவார்கள். சிலர் அவர்கள் கேட்டதைக் கொடுக்க ஆரம்பித்தனர். அது நிலைமையை மோசமாகிவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.
இது கூட பரவாயில்லை பல வாடகை வீடுகளில் அசைவ உணவு உண்ண தடை, இரவில் விருந்தினர்களைத் தங்க வைக்கக் கூடாது, நண்பர்களை வீட்டிற்கு அழைக்கக் கூடாது போன்ற வினோதமான கட்டுப்பாடுகளும் இருப்பதாக நெட்டிசன்கள் புலம்புகிறார்கள்...