வீடு வாங்கப் போறீங்களா...? பெண்களுக்கான சலுகைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க.

வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு வாங்குவது என்பது முக்கிய விருப்பமும் கூட. வீட்டுக் கடன்கள் மூலம் பலர் இதை அடைகிறார்கள்.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதிலும், பெண்கள் முக்கிய முதலீட்டாளர்களாக இருந்து வருகின்றனர். இது குறித்து முன்னணி சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 70% பெண்கள் ரியல் எஸ்டேட்டை தங்களுக்கு மிகவும் விருப்பமான முதலீட்டு வழி என்று கூறுகின்றனர். அவர்களில் பலர் ரூ.90 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட பிரீமியம் அல்லது சொகுசு வீடுகளை வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு வாங்குவது என்பது முக்கிய விருப்பமும் கூட. வீட்டுக் கடன்கள் மூலம் பலர் இதை அடைகிறார்கள். தங்கள் கனவு இல்லங்களை வாங்க விரும்பும் பெண்களுக்கு வழங்கப்படும் சில திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பெண்களுக்கு வீட்டு உரிமையை ஊக்குவித்தல்: அதிக அளவிலான பெண்கள் நிதி தொடர்பான விஷயங்களில் சுதந்திரமாக முடிவெடுத்து வருகின்றனர். மேலும், ரியல் எஸ்டேட் துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த மாற்றத்தை உணர்ந்து, அரசாங்கமும், நிதி நிறுவனங்களும் பெண்களுக்கு வீட்டுக் கடன்கள் பெறுவதை எளிதாக்கும் வகையில் பாலிசிகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன
வீடு வாங்கும் பெண்களுக்கு வழங்கும் சிறந்த நன்மைகளில் ஒன்று, பல நிறுவனங்கள் வழங்கும் குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆகும். கடன் வாங்குபவர் ஒரு பெண்ணாக இருந்தால், வட்டி விகிதம் பொதுவாக குறைவாக இருக்கும். இங்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 0.05 சதவீதம் முதல் 0.10 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்
இது சிறியதாகத் தோன்றினாலும், கடன் காலத்தில் கணிசமான சேமிப்பிற்கு வழிவகுக்கும். உதாரணமாக, கடன் வாங்குபவர் ஒரு பெண்ணாக இருந்தால், 20 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் வீட்டுக் கடனில், 0.10 சதவீதப் புள்ளி தள்ளுபடியுடன் ரூ.1 லட்சம் வரை வட்டியை மிச்சப்படுத்தலாம்
வீட்டுக் கடன் தகுதி: பெரும்பாலும் கடன் வாங்கும் பெண்கள் குறைந்த வட்டி விகிதங்களுடன், அதிக வட்டி செலுத்தும் கடன் தகுதியிலிருந்து பயனடைகிறார்கள். அதிலும் பெண்கள் பணம் செலுத்துவதில் தவறுவதில்லை. இந்த தகுதியே பெண்கள் சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற நீண்டகால தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. அதிக கடன் தொகையை பெற, பெண்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். இதுதவிர நிலையான வருமானம் மற்றும் சிறந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்
கடன் வாங்கும் பெண்களுக்கான மற்றொரு சிறந்த அம்சம், குறைக்கப்பட்ட ஸ்டாம்ப் டூட்டி கட்டணங்கள் ஆகும். பல மாநில அரசுகள், சொத்து ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஸ்டாம்ப் டூட்டி கட்டணங்களில் 1-2 சதவீத புள்ளிகள் குறைப்பை வழங்குகின்றன. உதாரணமாக, மகாராஷ்டிராவில் பெண்கள் சொத்து வாங்கினால் 1 சதவீத ஸ்டாம்ப் டூட்டி கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லியில், 2 சதவீத ஸ்டாம்ப் டூட்டி கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது
பல வரிச் சலுகைகள்: கடன் வாங்கும் பெண்களுக்கு, வீட்டுக் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டிலும் பல வரிச் சலுகைகளை வழங்குகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ், பெண்கள் அசல் பணத்தை திருப்பிச் செலுத்துதலில் ரூ.1.5 லட்சம் வரை விலக்குகளைப் பெறுவார்கள். கூடுதலாக, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24(b)ன் கீழ், பெண்கள் தங்கள் வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் இருந்து ரூ.2 லட்சம் வரை விலக்குகளைப் பெறுவார்கள்
முதல்முறையாக கடன் வாங்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்: முதல்முறையாக கடன் வாங்கும் பெண்களுக்கு கிடைக்கும் சலுகைகளை வழங்குவதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மூலம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்களுக்கும், குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கும் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பெண்களுக்கும் 3 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை வட்டி மானியங்களை வழங்குகிறது. அஃபொர்டபிள் ஹவுசிங் ஃபண்டு (AHF) ஆனது பெண்களுக்கு வழங்கப்படும் வீட்டுவசதி திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
இந்த சலுகைகளைப் பெற விரும்பும் பெண்கள், அடையாளச் சான்று, முகவரி மற்றும் வருமானச் சான்று மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட சில ஆவணங்களை வெரிஃபிகேஷனுக்காக சமர்ப்பிக்க வேண்டும். கடன் கிடைக்கும் நடைமுறையில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, அனைத்து ஆவணங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.