விமானத்தில் சீட் இல்லை.. புக்கிங் செய்த பயணிகளுக்கு கார் ஏற்பாடு செய்து கொடுத்த ஏர் இந்தியா

விமானத்தில் சீட் இல்லை.. புக்கிங் செய்த பயணிகளுக்கு கார் ஏற்பாடு செய்து கொடுத்த ஏர் இந்தியா
பயணிகளுக்கு கார் ஏற்பாடு செய்து கொடுத்த ஏர் இந்தியா

மும்பை: குஜராத்தில் இருந்து மும்பைக்கு செல்ல இருந்த விமானத்தில், புக்கிங் செய்த பயணிகளுக்கு இருக்கை இல்லை என்பதால், அவர்களை கார் மூலமாக அழைத்து சென்று மாற்று ஏற்பாட்டின் மூலம் தாமதமாக மும்பைக்கு அழைத்து சென்றுள்ளது ஏர் இந்தியா விமான நிறுவனம். இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடைசி நேரத்தில் போர்டிங் பாஸ் வழங்குவதை தவிர்த்த ஏர் இந்தியா விமானம், இருக்கை காலியாக இல்லை எனக்கூறி காரில் அனுப்பி வைத்த சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

13 பயணிகளுக்கு மட்டும்

குஜராத்தின் புஜ் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை வழக்கம் போல இந்த விமானம் கிளம்ப இருந்தது. விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்து இருந்த பயணிகள் அடித்து பிடித்து விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். இதில் பல பயணிகள் ஊரக கிராமப்புறங்களில் இருந்து எல்லாம் வந்த பயணிகள் ஆவர்

விமானம் காலை 8.55 மணிக்கு புறப்பட இருந்த நிலையில் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். விமானத்திற்குள் ஏற போர்டிங் பாசை விமான நிலைய ஊழியர்கள் வழங்கி வந்த நிலையில் சுமார் 13 பயணிகளுக்கு மட்டும் போர்டிங் பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். செக் இன் முடித்த பிறகும் கூட சில பயணிகளுக்கு விமானத்தில் போக முடியாது என்று திருப்பி அனுப்பியுள்ளனர் .

மாற்று ஏற்பாடு

இதையடுத்து குழப்பம் அடைந்த பயணிகள் ஏர் இந்தியா கவுண்டருக்கு சென்று என்னதான் நடக்கிறது? என்று கேட்டுள்ளனர். ஆனால் அப்போது உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளதாக புஜ் விமான நிலையத்தின் இயக்குநர் அனுராக் வைஷ்ணவ் கூறியுள்ளார்

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

இது தொடர்பாக பயணி ஒருவர் கூறும் போது, "நான் எனது குடும்பத்தினருக்கு டிக்கெட் புக் செய்து இருந்தேன். எனது மனைவி மற்றும் இரண்டு மகனும் இங்கே இருக்கிறோம். எனது சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் வேறு ஒரு விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். எனக்கு ஒதுக்கப்படவில்லை. தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா வழக்கமாக இயக்கும் விமானத்திற்கு பதிலாக ஏ321 சிறிய விமானத்தை இயக்கியுள்ளது.

இதுவே இருக்கைகள் குறைந்ததற்கு காரணம்" என்று தெரிவித்தார். சில பயணிகள் கூறும் போது, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கார் ஏற்பாடு செய்து கொடுத்த ஏர் இந்தியா, அகமதாபாத் அழைத்து சென்று அங்கிருந்து மும்பைக்கு பயணிக்க ஏற்பாடு செய்தது என்று தெரிவித்தனர்.

விமான நிறுவனம் விளக்கம்

இவ்விவவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா, AI609 புஜ் நகரில் இருந்து மும்பைக்கு செல்ல இருந்த ஏ 320 விமானத்திற்கு பதிலாக ஏ321 விமானம் இயக்கப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானம் மாற்றி இயக்கப்பட்டதால், சில பயணிகளுக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். வேறு விமானத்தில் இருக்கைகளை மாற்றி கொடுத்தோம்.கார் வழியாக அகமதாபாத் சென்று அங்கிருந்து மும்பை செல்ல ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.