சென்னை-அரக்கோணம் பயணிகளுக்கு வரப்பிரசாதம்.. புதிய மின்சார ரயிலில் இவ்வளவு வசதிகளா?

சென்னை: சென்னையில் இருந்து சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், சென்னை - திருப்பதி, நெல்லூர், கடற்கரை-வேலூர், கடற்கரை- திருவண்ணாமலை உட்பட 20-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 'மெமு' வகை பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகினறன. இதில் சென்னை-அரக்கோணம் இடையே பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய மெமு வகை பயணிகள் ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அரக்கோணம் வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. வசதிகளை பார்ப்போம்..
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 100, 150 கிமீ தூரமுள்ள மக்களுக்கு ரயில் சேவைகள் அழகாக கிடைக்கிறது. மெமு வகை மின்சார ரயில்களும், வழக்கமான புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை -செங்கல்பட்டு-காஞ்சிபுரம், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம்-திருத்தணி, கடற்கரை-கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் கழிவறை வசதிகள் இருக்காது...
மெமு ரயில்
அதேநேரம் நீண்ட தூர ரயில்களுக்கு மட்டும் கழிவறைகள் உள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் சென்னை கோட்டத்தில் இருந்து சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், சென்னை - திருப்பதி, நெல்லூர், கடற்கரை-வேலூர், கடற்கரை- திருவண்ணாமலை உட்பட 20-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 'மெமு' வகை பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்திலும், 8 அல்லது 9 பெட்டிகளே இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 250 கிலோ மீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் வரையில் குறுகிய தூரம் வரை இந்த பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது..
பயணிகள் கூட்டம்
இந்த ரயில்கள் தான் சென்னையில் வேலை செய்யும் புறநகர் பயணிகள் மற்றும் பக்கத்து மாவட்ட மக்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக உள்ளது. அலுவலகம் செல்வோர் மற்றும் சொந்த வேலையின் காரணமாக வெளியில் செல்லும் பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளில் ரயிலில் எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்...
அரக்கோணத்திற்கு புதிய ரயில்
செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி என எந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் குறைவு கிடையாது. அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் காலை மாலை நேரங்களில் தாங்கவே முடியாது. எனவே, கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும் எனவும், அடிப்படை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் எனவும் ரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் வந்தனர். பயணிகளின் வசதிக்கு ஏற்ப 12 பெட்டிகள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதற்காக, தெற்கு ரயில்வே சார்பில், ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது..
மெமு ரயில் வசதிகள்
இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் உத்தரவின்பேரில், பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ஆர்.சி.எப். ரெயில் பெட்டி நிறுவனத்தில் இருந்து புதிய பயணிகள் ரெயில் (மெமு) தெற்கு ரயில்வேக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய மெமு ரயில் தற்போது சென்னை -அரக்கோணம் இடையே இயக்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகள் மெமு ரயில்களை விட இந்த ரயிலில் பல்வேறு வசதிகள் கொண்டது. மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது...
ஏசி வசதி
மேலும் ரயில் பெட்டிகளை பொறுத்தவரை குறைந்த எடை உள்ள பெட்டிகளாக உள்ளன. ரயில் டிரைவர் இருக்கும் என்ஜின் பகுதியில் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற பயணிகள் ரெயிலை விட வேகமாக செல்லும் வசதியும் இருக்கிறது. இந்த ரயிலை பராமரிக்க மிகவும் குறைந்த செலவு தான் ஆகுமாம். புதிய ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தால், மேலும் இதுபோல் புதிய ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது...