தங்க சீட்டு போடலாமா.." பெரிய பூதத்தை ஒரே வரியில் விளக்கிய ஆனந்த் சீனிவாசன்! இதுல இப்படி வேற இருக்கோ

சென்னை: நமது நாட்டில் பொதுமக்கள் எப்போதுமே தங்கத்தைத் தான் பிரதான முதலீடாகக் கருதுவார்கள். கையில் கொஞ்சம் காசு இருந்தாலும் கூட தங்கத்தை வாங்கிவிடுவார்கள். அதிலும் பெரும்பாலான மக்கள் தங்கத்தை அருகே உள்ள நகைக்கடையில் சீட்டு போட்டே வாங்குவார்கள். இதுபோல தங்கத்தை வாங்குவது சரியானதாக இருக்குமா.. இதில் எதாவது வில்லங்கம் வருமா என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்...
நம் அனைவருக்கும் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காகவே நாம் காலம் முழுக்க ஓடிக் கொண்டு இருப்போம். நமக்குத் தெரிந்த விஷயங்களில் முதலீடும் செய்வோம். ஆனால், தெரியாத விஷயங்களில் முதலீடு செய்வது என்பதைப் போல ஒரு ரிஸ்க்கான விஷயம் எதுவுமே இல்லை. தெரியாத விஷயத்தில் பணத்தைப் போட்டால் முதலே போய்விடும்...
சிட் ஃபண்ட் ரிஸ்க்கள்
அப்படி மக்கள் பயந்து பயந்து முதலீடு செய்யும் விஷயங்களில் ஒன்று சிட் ஃபண்ட். இதில் பணத்தைப் போட்டுச் சம்பாதித்தவர்களும் பலர் இருக்கிறார்கள். பணத்தைப் போட்டு மொத்தமாக இழந்தவர்களும் இருக்கிறார்கள். இதுபோல சிட் ஃபண்ட்டில் பணத்தைப் போடலாமா.. அதில் எதாவது ரிஸ்க் இருக்கா என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்..
ஆனந்த் சீனிவாசன் பதில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோவில் சிட் ஃபண்ட்டில் பணத்தைப் போடலாமா என்ற கேள்விக்கு அவர், "அங்கீகாரம் பெற்ற சிட் ஃபண்ட் என்றால் அதில் லாபம் மிகக் குறைவாகவே இருக்கும். அங்கீகாரம் பெறாத சிட் ஃபண்ட் நிறுவனங்களும் உள்ளன. அது குறித்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கும் அதைச் சொல்ல விரும்புகிறேன்.
என்னிடம் ஒரு நண்பன் இருந்தான். கொஞ்சம் பணமும் இருந்தது. அந்த பணத்தை அவனிடம் கொடுத்தேன். பணமும் போய்விட்டது. நண்பனையும் இழந்துவிட்டேன் என்பதே எனது பதில். இது போலப் பலரை நான் பார்த்து இருக்கிறேன். இதுதான் சிட் ஃபண்ட்டுக்கு என்னோட பதில்" என்று அவர் பதிலளித்தார்..
தங்க சீட்டு- பெரிய பூதம்
சரி சிட் ஃபண்ட் தான் இப்படிச் சொல்கிறார்.. மாதாமாதம் நகைக்கடைகளில் சீட்டுப் போட்டு வாங்கலாமா.. அதைச் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். அதற்கும் அவர் பதிலளித்துள்ளார், "அந்த நகைக்கடை ஓராண்டுக்கு பிறகும் இருப்பாரா.. இருக்க மாட்டாரா என்பதைப் பொறுத்து இது மாறுபடும். பெரிய பெரிய கம்பெனி என்றால் நிச்சயம் இருக்கும்.
அதுபோல உங்களுக்கு ஓனரை தெரியும் என்றால் நீங்கள் பணம் போடலாம். சின்ன லெவல் என்றால் நாளை ஓனர் இல்லாமல் போனால் பணம் திரும்ப வராது. எனவே, அதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்..
கடன் வாங்கி முதலீடு செய்யவே கூடாது
தொடர்ந்து பேசிய அவர், "கடன் வாங்கி வாங்கி எப்போதும் முதலீடு செய்யக்கூடாது. சிலர் கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து புதிதாகத் தங்கம் வாங்குவார்கள். இப்போது ஆர்பிஐ ரெகுலேஷன்களை மாற்றி வருகிறது. மீண்டும் தங்கத்தை ரொட்டேட் செய்ய முடியாது. அது இது எனப் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். இது எல்லாம் நடைமுறைக்கு வந்தால் பெரிய சிக்கலாகும். பணத்தைச் சேர்ந்து வைத்து வாங்குவதே தங்கத்தைச் சரியானதாக இருக்கும். அதற்குள் தங்கம் உயருதே என நினைத்துக் கவலைப்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.