ரத்தாகிறதா ரூ.500 நோட்டு? ஏடிஎம்மில் இனிமேல் 200, 100 ரூபாய் மட்டுமா? இதோ மத்திய அரசு தந்த விளக்கம்

சென்னை: ஏடிஎம் எந்திரங்களில் ரூ.500 வினியோகிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தப்போவதாக தகவல்கள் சோஷியல் மீடியா முழுவதும் பரவி வருகிறது.. ATM இயந்திரங்களில் ரூ.200 மற்றும் ரூ.100 மட்டும் வினியோகிக்கப்பட உள்ளதால், கையிலுள்ள ரூ.500 நோட்டுகளை இப்போது இருந்தே பணமாக்கிக்கொள்ளுங்கள்'' என்றும் தகவல் பரவி வருகிறது.. இந்நிலையில், இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.. அத்துடன் விளக்கம் ஒன்றையும் தந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016-,ல் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, புதிதாக ரூ.500 கொண்டு வரப்பட்டது. அதேபோல, 1000 ரூபாய் நோட்டுக்கு பதில் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது. தற்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை.
இந்நிலையில், 500 ரூபாய் நோட்டை மத்திய அரசு ரத்து செய்யப்போவதாக, கடந்த மாதம் திடீரென ஒரு செய்தி பரவியது.. நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதால், இதுதொடர்பாக வங்கிகளின் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் பரவின.
இப்படியொரு தகவல் பரவ காரணம், மக்களிடம் ரூ.100 ரூபாய், ரூ.200 பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதால், ஏடிஎம்களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளின் இருப்பை கூட்ட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியிருந்தது.. உடனே மத்திய அரசு 500 ரூபாய் நோட்டை ரத்து செய்ய போகிறது என்று , சோஷியல் மீடியாவில் பரவ தொடங்கிவிட்டது. ஆனால், இதனை மறுத்து, உடனடியாக ரிசர்வ் வங்கி விளக்கம் ஒன்றை தந்திருந்தது..
ரிசர்வ் வங்கி விளக்கம்
அதில், ‛‛500 ரூபாய் நோட்டுக்கான டெண்டர் சட்டப்பூர்வமானதாவே உள்ளது.. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிப்பதற்காவும் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 500 ரூபாய் நோட்டு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதால், தாராளமாக பயன்படுத்தலாம்'' என்று தெரிவித்து, நிலவி வந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தது
இந்நிலையில், மீண்டும் ரூ.500 ரத்தாக போகிறது என்று செய்திகள் நேற்று முழுவதும் பரவிவிட்டது.. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி இந்த முடிவு எடுத்துள்ளதாக இணையத்தில் செய்தி பரவியது.
இலக்கு நிர்ணயம்?
அதில், ''வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு வங்கிகள் தங்களது 75 சதவீத ATM எந்திரங்களில் ரூ.500 வினியோகிப்பதை நிறுத்தவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. 2026, மார்ச் 31-ந்தேதி, ரூ.500 வினியோகிக்கப்படாத ATMகளின் எண்ணிக்கை 90 சதவீதம் ஆக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ATM இயந்திரங்களில் ரூ.200 மற்றும் ரூ.100 மட்டும் வினியோகிக்கப்பட உள்ளதால், கையிலுள்ள ரூ.500 நோட்டுகளை இப்போது இருந்தே பணமாக்கிக்கொள்ளுங்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.. இந்த தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சோஷியல் மீடியாவிலும் வேகமாக ஷேர் ஆனது..
ஓடோடி வந்து விளக்கம் தந்த மத்திய அரசு
இதனை தற்போது மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த தகவல் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.