முருகன் கோவில் கும்பாபிஷேகம்: செல்வப்பெருந்தகையால் சர்ச்சை

சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தன்னை தடுத்து நிறுத்தியதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள, வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது. அதில், தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை பங்கேற்றார். கும்பாபிஷேகம் முடிந்ததும் பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, ''வல்லக்கோட்டை முருகன் கோவில், நான் எம்.எல்.ஏ.,வாக உள்ள, ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்குள் உள்ளது.
''ஆனாலும், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தினர். மக்களோடு மக்களாக நின்று கும்பாபிஷேகத்தை பார்த்தேன். கடந்த 2,000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னையை, ஒரே நாளில் தீர்த்து விட முடியாது,'' என்றார். இதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்: வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில், தான் புறக்கணிக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை பொய் பேசியுள்ளார். கோவிலில் தீண்டாமை இருக்கிறது என, பொறுப்பற்ற முறையில் பேசி, சமூக பதற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளார். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி கும்பாபிஷேகத்தின்போதும் கோபுர விமானங்களில், புனித நீர் ஊற்றும்போதும், அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: வல்லக்கோட்டை கும்பாபிஷேக விழாவுக்கு தாமதமாக சென்ற நிலையிலும், செல்வப் பெருந்தகையை, மூலவர் விமான கலசம் அருகே நிற்க வைத்துள்ளனர். ஆனாலும், பொய் சொல்வது, உள்நோக்கம் கொண்டது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: நேற்று முன்தினம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், தி.மு.க.,வின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் சேகர்பாபு, என்னை சந்தித்து கேட்டறிந்து, வருத்தம் தெரிவித்தார்.
நடந்த சம்பவம் குறித்து, உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். அதிகாரிகள் செய்த தவறுக்கு, அனைத்து தரப்பினரையும் சமமாக நடத்தும், முதல்வர் ஸ்டாலினின் நற்பெயருக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும், எவ்வித களங்கமும் ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது