தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்கள்..

விமான பயணம் என்பது ஆடம்பரம் என்றும், வசதி படைத்தவர்களால் மட்டுமே வானத்தில் பறக்கமுடியும் என்ற நிலையும் முன்புஇருந்தது. அப்போதெல்லாம் செல்வந்தர்களும், முக்கிய பிரமுகர்களும் மட்டுமே விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட பிறகும், குறைந்த கட்டணத்தில் விமான சேவை தொடங்கிய பிறகும் நடுத்தர மக்களும், ஆத்திர அவசரத்துக்கு அடித்தட்டு மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ளத்தொடங்கினர். இப்போது கையில் மஞ்சப்பை, கட்டைப்பை வைத்துக்கொண்டும் விமானங்களில் பயணம் செய்பவர்களை பார்க்கமுடிகிறது. அதனால்தான் இப்போதெல்லாம் விமானங்களில் டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் கூடுதல் விமான சேவைக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் குறைந்த கட்டண விமான சேவையான 'உதான்' விமான சேவைக்கு தமிழ்நாட்டில் அதிக தேவை இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "உதான் சேவை 1.5 கோடி நடுத்தர மக்களின் விரைவான போக்குவரத்து ஆசையை பூர்த்தி செய்துள்ளது. இந்த திட்டம் 88 விமான நிலையங்களை இணைத்து 619 வழித்தடங்களில் விமான சேவையை நடத்த வழிவகை செய்துள்ளது. இந்த வெற்றியின் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய ஊர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தவும், 4 கோடி பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்ள வசதியாகவும் புதிய உதான் திட்டம் தொடங்கப்படும்" என்றார். இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி, 'விமான சேவை மூலம் மண்டலங்களை இணைக்கும் 'உதான்' திட்டத்தினால் தமிழ்நாட்டில் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த ஊர்களில் விமான நிலையங்களை அமைக்கும் பணியும், மேம்படுத்தப்படும் பணிகளும் நடந்துவருகின்றன. இதில் சேலத்தில் விமான சேவை தொடங்கிவிட்டது. இதுதவிர ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவ பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டு, இப்போது செயல்படாமல் இருக்கும் விமான நிலையங்களான அரக்கோணம், சோழவரம், சூலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களிலும், சிவகங்கையிலும் இருக்கும் ஓடுதளங்களை சீர்படுத்தி அவற்றை 'உதான்' திட்டத்தின் கீழ் ஏலம் விடவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன' என்றார். ஆக விரைவில் மேலும் 9 இடங்களில் குறைந்த கட்டண விமான சேவை தொடங்க இருக்கிறது.
இந்த பட்டியலில் கயத்தாரில் இருக்கும் பயன்படுத்தப்படாத விமான நிலையத்தையும் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. இதுதவிர ஓசூரில் புதிய விமான நிலையம் தொடங்க மத்திய அரசாங்கம் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. தற்போது இதற்கான இட தேர்வும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மேலும் தூத்துக்குடியில் நடக்கும் விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்து 27-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். எனவே இனி அங்கு பெரிய ரக விமானங்கள் வந்து இறங்கவும், இரவு நேர விமான சேவை தொடங்கவும் முடியும். இதுமட்டுமல்லாமல் மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களிலும் விரிவாக்க பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இதன் மூலம் உள்நாட்டில் உள்ள மேலும் பல நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு விமான போக்குவரத்தில் முன்னணியில் இருக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.