மீண்டும் மாறுகிறது அரசு பஸ்களின் நிறம்

மீண்டும் மாறுகிறது அரசு பஸ்களின் நிறம்
போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்களின் நிறத்தை மாற்ற, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பச்சை நிறத்தில் இருந்தன. பி.எஸ்., நான்கு ரக பஸ்கள் வருகையால், இவற்றின் நிறம் நீலத்துக்கு மாற்றப்பட்டது. பயணியரின் பார்வைக்கு பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக, வெளியூர் பஸ்களின் நிறம் மஞ்சளுக்கு, 2023ல் மாற்றப்பட்டது

பெரும்பாலான மாவட்டங்களில் மஞ்சள் நிற பஸ்கள் இயங்கி வரும் நிலையில், மீண்டும் பஸ்களின் நிறத்தை மாற்ற முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

இனி வர உள்ள பஸ்கள், மேல் பகுதி கருப்பு, கீழ் பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். 'பார்டர்' மஞ்சள் மற்றும் வெண்மை நிறத்துடன் இருக்கும்

விழுப்புரம், கரூர், நாகர்கோவில், திருநெல்வேலி பணிமனைகளுக்கு முதல் கட்டமாக தருவிக்கப்படும் இந்த நிற பஸ்கள், அடுத்ததாக மாநிலம் முழுதும் இயக்கத்துக்கு கொண்டு வரப்படஉள்ளன.

பச்சை நிறம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'சென்டிமென்ட்' ஆன நிறம். மஞ்சள் நிறம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 'சென்டிமென்ட்' ஆன நிறம் என, கூறப்பட்டது.

தற்போது, புதிய பஸ்களின் நிறத்திலும், 'சென்டிமென்ட்' ஏதாவது இருக்குமா என்ற, கேள்வி எழுகிறது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'முன்னர் அரசு பஸ்களுக்கு ஒரே வண்ணம் மட்டும் தீட்டப்பட்டது. தற்போது, ஆம்னி பஸ்கள் போல இருப்பதற்காக, வெவ்வேறு வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. இதில், 'சென்டிமென்ட்' எதுவும் கிடையாது' என்றனர்