திறந்தவெளியில் வளரும் கோழிகளுக்கும் முட்டைகளுக்கும் பெரிய மார்க்கெட் இருக்கு!''

நிறைய பேர் கேப்பாங்க, ‘என்னப்பா, இன்ஜினீயரா வேலை பார்த்துட்டு இப்படி கோழிகளோட மல்லுக்கட்டிக்கிட்டு கிடக்குறியே’ன்னு! நான் காதுலயே வாங்க மாட்டேன். இதுல இருக்கிற பலகோடி ரூபாய் பிசினஸ் எனக்குத் தெரியும். உலகம் முழுவதும் கூண்டுக்குள்ள அடைச்சு வளர்க்கிற பிராய்லர் கோழிகளையும் முட்டைகளையும் பயன்படுத்துறது குறைஞ்சுக்கிட்டே வருது. சீக்கிரம் வளர மருந்து, நோய் எதிர்ப்புக்கு மருந்து, நோய் வந்தா மருந்துன்னு அந்தப் பண்ணை முறையில நிறைய பிரச்னைகள் இருக்கு. திறந்தவெளியில வளரும் கோழிகளுக்கும் முட்டைகளுக்கும் உலகளவுல பெரிய மார்க்கெட் உருவாகியிருக்கு. இந்தியாவிலேயே இதைப் பெரிசா பண்ணுறது நாங்க மட்டும்தான்...’’ உற்சாகம் புரள்கிறது, மாதவனின் பேச்சில்.
பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூரைச் சேர்ந்தவர் மாதவன். ‘அதிபன் பார்ம்ஸ்' இவருடைய நிறுவனம். கேஜ் ப்ரீ, ப்ரீ ரேஞ்ச் எனப்படும் மேய்ச்சல் கோழிகளையும் முட்டைகளையும் உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம். இந்தியா முழுதுமுள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்கள், நட்சத்திர உணவகங்களுக்கு முட்டைகளை சப்ளை செய்கிறார். சுமார் 10,000 கோழிகள் இவருடைய 17,000 சதுர அடிப் பண்ணையில் வளர்கின்றன. மாதம் 3 லட்சம் முட்டைகள் உற்பத்தியாகின்றன. தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்-அப் டி.என் நிறுவனம், ரூ.2.2 கோடியை அதிபன் பார்மில் முதலீடு செய்துள்ளது. ‘பீப்பிள் ஃபார் அனிமல்’ நிறுவனம், இவர்களின் செயல்பாட்டைப் பாராட்டி 1.66 கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்களை வழங்கி உற்சாகப்படுத்தியிருக்கிறது