இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு தடையாக உள்ள பேரங்கள் என்ன?

இந்தியா-அமெரிக்கா இடையிலான பெரிய வர்த்தக ஒப்பந்தம் கைநழுவிச் செல்கிறதா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்த ஜுலை 9 காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
இந்தியா, அமெரிக்கா இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தைகள் கடுமையான பேரங்களில் சிக்கிக் கொண்டுள்ளது.
வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கேரோலின் லெவிட், "ஒப்பந்தம் தவிர்க்க முடியாதது" எனக் குறிப்பிட்டிருந்தார். டிரம்பின் ஒரு கூற்றுக்கு எதிர்வினையாற்றிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு "பெரிய, நல்ல, அழகான" ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கும் எனக் கூறியிருந்தார்.
இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட இருப்பதாகவும், அது இந்திய சந்தைகளை அணுகுவதற்கு வழிவகுக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இப்படியாக நம்பிக்கையான அறிகுறிகள் தென்பட்டாலும், இரு தரப்பிலும் இருக்கும் பேச்சுவார்த்தையாளர்கள் அதற்கு இன்னும் கடினமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் இதில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.