திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்- பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு

திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்- பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு
திருப்பதி மலைப்பாதையில் வனப்பகுதியில் இருந்து குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் வந்தன

யானைகள் கூட்டம் சாலையில் இருப்பதை கண்ட பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்பதி:

 

திருப்பதி மலைப்பாதையில் வனப்பகுதியில் இருந்து குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் வந்தன.

யானைகள் கூட்டம் சாலையில் இருப்பதை கண்ட பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

யானைகள் கூட்டம் சாலையில் இருந்து விலகி செல்லாமல் அட்டகாசம் செய்தன. மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை விரட்ட தீப்பந்தங்களை ஏற்றி, அதிக ஒலி எழுப்பும் மேளம் அடித்து சைரன் ஒலித்தனர்.

 

அப்போது யானைகள் வனத்துறை ஊழியர்களை தாக்க முயன்றன. வனத்துறை ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் ஒரு வழியாக யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

இதனால் மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு மலைப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.