புத்த துறவிகளுடன் உறவு; 100 கோடி பணம் பறிப்பு - தாய்லாந்து பெண்ணிடம் 80,000 போட்டோ, வீடியோக்கள்

புத்த துறவிகளுடன் உறவு; 100 கோடி பணம் பறிப்பு - தாய்லாந்து பெண்ணிடம் 80,000 போட்டோ, வீடியோக்கள்
தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் , ஜூன் 2024-ல் 81 துறவிகளுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். சமீபத்திய தவறான நடத்தைகள் "பௌத்தர்களின் மனதில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாய்லாந்து காவல்துறை, `மிஸ் கோல்ஃப்' (Ms Golf) என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணை கைது செய்துள்ளது. இவர் புத்த மத துறவிகளை பாலியல் உறவுகளுக்கு ஈர்த்து, அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பெண் ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (11.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) (இந்திய ரூபாய் மதிப்பில் 100 கோடி) பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது, 80,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்து துறவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறியதை அடுத்து இந்த விஷயம் காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

கோல்ஃப்(பெண்), கடந்த ஆண்டு அந்த துறவியுடன் உறவு வைத்து, பின்னர் அவரது குழந்தையை சுமப்பத்தாக கூறி 70 லட்சம் பாட்டுக்கு மேல் குழந்தை ஆதரவு தொகை கோரியதாக காவல்துறை தெரிவித்தது. மற்ற துறவிகளும் இதே முறையில் பணம் செலுத்தியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

அப்பெண்னின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில், மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இவர் மீது மிரட்டி பணம் பறித்தல், பணமோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமில்லாமல் காவல்துறையினர், இப்படி தவறாக நடந்து கொள்ளும் துறவிகள் குறித்து புகாரளிக்க ஹாட்லைன் ( அவசர அல்லது முக்கியமான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தப்படும் தொலைபேசி சேவை) ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தாய்லாந்து புத்த மத அமைப்பை உலுக்கியுள்ளது. அதன் நிர்வாக அமைப்பு (சங்க சுப்ரீம் கவுன்சில்) துறவற விதிகளை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க உள்ளது. விதிகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மன்னரின் உத்தரவு

தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் , ஜூன் 2024-ல் 81 துறவிகளுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். சமீபத்திய தவறான நடத்தைகள் "பௌத்தர்களின் மனதில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதே போன்று 2017-ல், ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற விராபோல் சுக்போல் என்ற துறவி, பாலியல் குற்றங்கள், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வந்தன. 2022 ஆம் ஆண்டில் பெட்சபூன் மாகாணத்தில் ஒரு கோயிலில் இருந்த நான்கு துறவிகள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு துறவறத்திலிருந்து நீக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.