தங்கம், வெள்ளி, பிட்காயின் முதலீடு -Rich dad Poor dad புத்தக எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை

உலக பொருளாதாரம் நாள்தோறும் மாற்றங்களை சந்தித்து வருகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தின் போக்கையே மாற்றி அமைத்திருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க போகிறார். இது தவிர அமெரிக்க பொருளாதாரமே மந்தநிலையை நோக்கி சென்று வருகிறது. பட்டதாரிகளுக்கு வேலை இல்லை, ஏஐ வருகையால் வேலை இழப்பு என பல சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதா, பத்திரங்களில் முதலீடு செய்வதா அல்லது தங்கத்தில் முதலீடு செய்வதாக கிரிப்டோ கரன்சிகள் பக்கம் நகர்வதா என முதலீட்டாளர்கள் பெரிய குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த சூழலில் Rich dad Poor dad புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மிகப்பெரிய ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு இருக்கிறார்
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய ஒரு பொருளாதார நெருக்கடியை நாம் காண இருக்கிறோம் என கூறி இருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அவர் குமுழிகள் வெடிக்க தொடங்க உள்ளன எனக் கூறியிருக்கிறார். வெள்ளி, தங்கம், பிட்காயின் உள்ளிட்டவற்றின் மதிப்பும் சரியும் எனக் கூறியிருக்கிறார். இது நல்ல செய்தி என்னவென்றால் தங்கம் ,வெள்ளி மற்றும் பிட்காயின் விலைகள் குறையும் போது நான் அவற்றை வாங்குவேன் என அவர் பதிவு செய்திருக்கிறார்.
ஜூலைக்குப் பிறகு உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார் ராபர்ட் கியோசாகி. மக்கள் பணத்தை சேமித்து வைக்க வேண்டாம் என கூறுகிறார். டாலருக்கு மதிப்பே இருக்காது என தெரிவித்து வரும் அவர் உண்மையான தங்கம் , வெள்ளி ஆகியவற்றை சேமிக்க தொடங்குங்கள் என கூறியிருக்கிறார் . வரலாற்றிலேயே அதிக கடன் கொண்ட நாடாக அமெரிக்கா மாறி வருகிறது வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய ஒரு பொருளாதார நெருக்கடியை உலகம் காணப்போகிறது அது விரைவில் வரப்போகிறது என மீண்டும் ஒருமுறை அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்
புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட் தன் கைவசம் இருந்த பங்குகளை விற்பனை செய்துவிட்டு 350 பில்லியன் டாலர்களை பணமாக வைத்திருக்கிறார் , விரைவில் சந்தைகள் சரிந்து பங்குகளில் மதிப்புகள் குறையும் அப்போது அவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக அவர் காத்திருக்கிறார் என்றே நான் கணிக்கிறேன் என கூறி இருக்கிறார். அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.