செடியின் அடி முதல் நுனி வரை ஆராயும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மக்காச்சோளத்தில் நடக்குது முதல் ஆராய்ச்சி

செடியின் அடி முதல் நுனி வரை ஆராயும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மக்காச்சோளத்தில் நடக்குது முதல் ஆராய்ச்சி
வேளாண் பயிர்களின் அனைத்துக் குணாதிசயங்களை உள்ளடக்கிய தரவுகளை, ஏ.ஐ., தொழில்நுட்பம்

கோவை: வேளாண் பயிர்களின் அனைத்துக் குணாதிசயங்களை உள்ளடக்கிய தரவுகளை, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக தொகுத்து, 'டிஜிட்டல் பெனோடைப்பிங்' முறையில் பகுப்பாய்வு செய்யும் திட்டத்துக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது..

வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், தேவைக்கேற்பவும், புதிய பயிர் ரகங்களை உருவாக்க, பல நுாற்றுக்கணக்கான கலவைகளில், புதிய ரகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதில், பருவநிலை மாறுபாடுகளைத் தாங்கும் பண்பு, உயரம், தடிமன், மகசூல், பூச்சி, நோயெதிர்ப்புத் திறன் என பல்வேறு பண்புகளையும் தொகுத்து அதில் சிறந்தவற்றை, வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு செய்து, அதில் இருந்து உரிய ரகங்களை மேம்படுத்துவர். இவ்வாறு, ஒரு புதிய பயிர் ரகத்தை வெளியிட, ஐந்து முதல், எட்டு ஆண்டுகள் வரை ஆகும்.

பயிர் ஆய்வு நிலையில் இருக்கும்போது, பயிரின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும், அதன் பண்புகளை பணியாளர்கள் குறித்து தரவுகளைத் திரட்டுவர். இப்பணியில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக, வேளாண் பல்கலை மற்றும் உடுமலையைச் சேர்ந்த 'வலைரியா' நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வலைரியா இணை நிறுவனர் பிரியதர்ஷினி கூறியதாவது:

முதலில், மக்காச்சோளத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வுத்திடலில், ஒரு பயிரில் இருந்து, 40 முதல், 50 பண்புகள் வரை சேகரிப்பர். ஒரு ஏக்கரில், 40,000 மக்காச்சோள பயிர்கள் இருக்கும். பணியாளர்கள், பரவல் முறையில், 40 -- 50 செடிகளைத் தேர்ந்தெடுத்து, பண்புகளைக் குறித்துக் கொள்வர். இதில், துல்லியத்தன்மை சற்று குறைவாக இருக்கும். வாரக்கணக்கில் கால அவகாசம் தேவைப்படும்.

நாங்கள் மேற்கொண்டுள்ள திட்டத்தில், அதி உயர் சென்சார்கள் பொருத்திய டிரோன்களுக்கு, மெஷின் லேர்னிங் முறையில் வழிகாட்டல்கள் வழங்கப்படும். டிரோன்கள் ஒவ்வொரு பயிரையும், 360 டிகிரி கோணத்தில், 5 செ.மீ., நெருக்கத்தில் அவதானித்து, துல்லியமான தரவுகளைப் பெற்று, 'கிளவுட்'ல் சேகரிக்கும்.

அத்தரவுகளை, அதற்கான பிளாட்பார்ம் வாயிலாக, தேவையான வகைகளில் பகுத்துக் கொள்ள முடியும். இந்த டிரோன்களில் ஐ.ஐ.டி., ஹைதராபாத்துடன் இணைந்து, ஆர்.டி.கே., - ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரே நாளில் ஒரு ஏக்கரில் உள்ள அனைத்துப் பயிர்களின் தரவுகளையும் சேகரிக்க முடியும். இதனால், துல்லியமான தரவுகள் கிடைக்கும்

இவ்வாறு, அவர் கூறினார்.