முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்: நாம செஞ்ச பெரிய தப்பு.. உலகத்துல சாக்லேட்டே இல்லாம போக போகுது!

உலகில் இருக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொருள் என்றால் அது சாக்லேட் தான். சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை சாக்லேட்டின் ருசிக்கு மயங்காதவர்கள் கிடையாது. அன்பை வெளிப்படுத்தும் தருணங்களில் எல்லாம் அதற்கான குறியீடாக சாக்லேட்டை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் வருங்காலத்தில் அந்த சாக்லேட்டே இல்லாத நிலை உண்டாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாக்லேட்டின் மூலப்பொருள்: சாக்லேட் உற்பத்தி செய்வதற்கு மிக முக்கியமான ஒரு பொருளாக கோகோ இருக்கிறது. கோகோ மரங்களில் இருந்து கோகோ பீன்ஸ்கள் பறிக்கப்படுகின்றன. இந்த பீன்ஸ்களை வறுத்து அரைத்து சலிப்பதன் மூலம் கோகோ பவுடர் மற்றும் கோகோ வெண்ணெய் ஆகியவை பிரித்தெடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டுதான் நமக்கு சாக்லேட் தயார் செய்யப்படுகிறது. சாக்லேட் என்பது உலகின் மிகப்பெரிய சந்தை. ஆனால் அந்த சந்தை பெரிய அடி வாங்க போகிறது.
உற்பத்தி குறைப்பு: உலகின் மிகப்பெரிய சாக்லேட் உற்பத்தி நிறுவனமான பேரி கேலிபேட் தங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாக்லேட் உற்பத்தி மற்றும் விற்பனை அளவை குறைத்து இருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு மில்லியன் டன்கள் சாக்லேட் தயாரிக்கும் இந்த நிறுவனம் கோகோ தட்டுப்பாட்டால் உற்பத்தியை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக உலகம் முழுவதும் தற்போது கோகோ தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது
கானா, ஐவரி கோஸ்ட்: 2023-24 ஆம் ஆண்டில் கோகோ உற்பத்தி 13 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் அதற்கான தேவை அதே அளவில் தான் இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக 4.94 லட்சம் டன்கள் கோகோ தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த கோகோ கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளில் தான் கிடைக்கிறது. ஆனால் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்கள் இங்கே கோகோ உற்பத்தியை சரிவடைய செய்துள்ளன.
குறைந்த கோகோ உற்பத்தி: கானாவில் ஆண்டுக்கு 8 லட்சம் டன்கள் கோகோ உற்பத்தி செய்யப்படும். ஆனால் கடந்த ஆண்டு அது 5 லட்சம் டன்களாக குறைந்துவிட்டது. ஐவரி கோஸ்டில் சராசரியாக 2.25 மில்லியன் டன்கள் கோகோ உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அது 1.8 டன்களாக குறைந்து இருக்கிறது.
கோகோ விலை 124% உயர்வு: கோகோ உற்பத்தி குறைவு என்பது சாக்லேட் உற்பத்திக்கு சிக்கலை ஏற்படுத்தும். சாக்லேட்டிற்கான டிமாண்ட் அதே அளவில் இருக்கிறது ஆனால் சப்ளை குறைவாக இருக்கிறது என்றால் சாக்லேட்டுகளின் விலை உயரும். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக சர்வதேச அளவில் கோகோ பீன்ஸ்களின் விலை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் 25 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றால் கோகோவின் விலை 124 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்கிறது ஒரு தரவு.
சாக்லேட் விலை உயரும்: சர்வதேச கோகோ கூட்டமைப்பு இந்த ஆண்டு கோகோ உற்பத்தி மீண்டு வரவில்லை என்றால் அடுத்த சில ஆண்டுகளில் சாக்லேட்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. கோகோ மரங்களை பொறுத்தவரை சரியான காலநிலை தான் சத்தான ருசியான கோகோ பீன்ஸ்களை உற்பத்தி செய்ய..
புவிவெப்பமடைவதே காரணம்: பருவநிலை மாற்ற பாதிப்பு தான் கோகோ உற்பத்திக்கு எமனாக மாறியுள்ளது. புவி வெப்பமடைவது கோகோ பீன்ஸ் மரங்களுக்கு மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த மரங்கள் வளர மிக சூடான வெப்பநிலையும் இருக்கக் கூடாது மிக குளிர்ச்சியான நிலையும் இருக்கக் கூடாது. அதாவது அதிகபட்சம் சராசரியாக 30 லிருந்து 32 டிகிரி செல்சியஸிற்குள் வெப்பம் இருக்க வேண்டும் , குறைந்தபட்சம் 18 ல் இருந்து 21 டிகிரி செல்சியஸிற்குள் வெப்பம் இருக்க வேண்டும்.
20% சாகுபடி குறையும்: இது கோகோ உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2050 ஆம் ஆண்டுக்குள் இந்த பருவநிலை மாற்ற மாறுபாடுகள் சர்வதேச அளவில் கோகோ சாகுபடியை 20 சதவீதம் குறைத்துவிடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இந்த பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும் என கூறப்படுகிறது. இது தவிர பருவம் தவறிய மழை கோகோ மரங்களில் வியாதிகளை வரவைத்து சாகுபடி யை குறைக்கின்றன.