இந்திய விமானப்படை ஓடுதளத்தை மோசடியாக விற்றதாக சர்ச்சை - என்ன நடந்தது?

விமானப்படை தளங்களின் ஓடுதளம் என்று யாராவது கேட்டால் உடனே அவர்களின் மனதில் தோன்றி மறைவது போர் விமானங்கள் பறப்பதும் அதனால் ஏற்படும் சத்தமும்தான். ஆனால் பஞ்சாபில் உள்ள இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஓடுதளம் மோசடி வழக்கு பின்னணியில் பேசுபொருளாகியுள்ளது.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஃபதுவாலா கிராமத்தில் அமைந்திருக்கும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளம் ஒன்றை விற்பனை செய்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுடன் இந்தியா போர் புரிந்த போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் இந்த ஓடுதளத்தை இந்திய விமானப்படை பயன்படுத்தியது.
இந்த ஓடுதளம் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள 15 ஏக்கர் நிலத்தின் மதிப்பு தற்போது கோடிக்கணக்கில் இருக்கிறது. 1997-ஆம் ஆண்டு இந்த நிலத்தை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இந்த வழக்கில் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தாய் மற்றும் மகன் மீது வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான நிலத்தை தங்களின் சொந்த நிலம் என்று கூறி விற்பனை செய்ததாக இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்த நிலத்தை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தி ஓடுதளம் அமைக்கப்பட்டது. இந்த நிலத்திற்கான இழப்பீடும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்துறை ஆவணங்களில் சில நில உரிமையாளர்களின் பெயர்கள் மாற்றப்படாமல் இருந்தது.
போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தை வைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த நிலத்தை மீண்டும் விற்பனை செய்துள்ளனர். கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகே பஞ்சாப் காவல்துறை இதில் நடவடிக்கை மேற்கொண்டது. இதுவரை தனி நபர்கள் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை
.காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
2023, டிசம்பரில், நிஷான் சிங் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 30 அன்று வழக்கை நான்கு வாரங்களில் விசாரித்து முடிக்குமாறு பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை நடத்தி தன்னுடைய அறிக்கையை ஜூன் 20 அன்று சமர்பித்தது. அதன் அடிப்படையில் ஜூன் 28 அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது காவல்துறை.
பஞ்சாப் காவல்துறை உஷா அன்சல் மற்றும் அவருடைய மகன் நவீன் அன்சல் ஆகியோருக்கு எதிராக குல்கர்ஹி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. தற்போது டெல்லியில் வசித்து வரும் அவர்கள் ஃபெரோஸ்பூரில் அமைந்திருக்கும் துமானி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 419, 420, 465, 467, 471 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டி.எஸ்.பி. கரண் சர்மா வழக்கை விசாரித்து வருகிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அந்த நிலம் இந்திய ராணுவத்திற்கு சொந்தமானது என்பது தெரியும் என்று தெரிய வந்துள்ளது என பிபிசியிடம் விவரிக்கிறார் கரண் சர்மா. தெரிந்திருந்தும் அந்த நிலத்தை அவர்கள் விற்றுள்ளனர் என்கிறார் அவர்.
"அந்த நிலம் ராணுவத்திற்கு சொந்தமாக இருந்த போதும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அது அவர்களின் நிலம் என்று கூறுகின்றனர்," என்று தெரிவிக்கிறார் அவர்.