ரேஷன் கார்டு இருந்தால் போதும் ; மகளிர் உரிமைத்தொகை முதல் காப்பீடு வரை... பயன்தரும் அரசு திட்டங்கள் என்னென்ன?

ரேஷன் கார்டு இருந்தால் போதும் ; மகளிர் உரிமைத்தொகை முதல் காப்பீடு வரை... பயன்தரும் அரசு திட்டங்கள் என்னென்ன?
சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளைச் சென்றடையச் செய்வதில் ரேஷன் அட்டையை ஒரு முக்கிய ஆவணமாகவும் பயன்படுத்துகிறது

தமிழகத்தில் ரேஷன் அட்டை என்பது உணவுப் பொருட்கள் வாங்கும் அடையாள அட்டையாக மட்டுமல்ல, மகளிர் உரிமைத்தொகை, ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) மருத்துவக் காப்பீடு போன்ற நலத்திட்டங்களை அணுகுவதற்கான அடிப்படைத் தகுதியாகவும் உள்ளது. சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளைச் சென்றடையச் செய்வதில் தமிழக அரசு, ரேஷன் அட்டையை முக்கிய ஆவணமாகப் பயன்படுத்துகிறது. இந்நிலையில், ரேஷன் அட்டை அடிப்படையில் கிடைக்கக்கூடிய சில திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம்: ரேஷன் அட்டையின் முதன்மையான பயன்பாடு, நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அல்லது இலவசமாகப் பெறுவதற்காகும். இது குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசின் முக்கியத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் முதன்மைத் தகுதிகளில் ஒன்று ரேஷன் அட்டை வைத்திருப்பதாகும். இது, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நேரடிப் பொருளாதாரப் பலன்களை வழங்கி, பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது...

சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்கள்: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, அரசின் பல்வேறு சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களான முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்றவற்றை பெறுவதற்கும் இது முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. இத்திட்டங்கள், பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு நிதி ஆதாரத்தை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுகின்றன..

ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) - முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற உதவுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற, ரேஷன் அட்டை (குறிப்பாக PHH/AAY எனப்படும் முன்னுரிமை குடும்ப அட்டை அல்லது அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை) வைத்திருப்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குச் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்கிறது. ரேஷன் கார்டு இருந்தால், நீங்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்கு விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றவுடன், நீங்கள் பலன்களைப் பெறலாம்..

இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பண்டிகை அன்று தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத்தொகையும் வழங்கப்படுவது உண்டு.

இயற்கை இடர் நிவாரணம்: வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்கள் ஏற்படும்போது, அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் நிதி உதவிகளைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமான அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட திட்டங்களுக்கான தகுந்த தகுதிகள் இருப்பதும் அவசியம்...